பெரிய ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு நிகர் உண்டாக்குதல். உதாரணத்துக்கு அல்லாஹ்வை அழைப்பது போன்று அதனை அழைப்பதாகும். அல்லது இரட்சிக்கத்தேடுதல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அதற்கு ஏற்படுத்துவதாகும்.
‘இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘பாவங்களில் மிக மகத்தானது எது?’ என்று கேட்டார்கள். உன்னை அல்லாஹ் படைத்திருக்கும்போது, ஏதேனுமொன்றை அவனுக்கு நிகராக்குவதாகும்’ என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
துஆவில் ஷிர்க் ஏற்படுத்தல்:- பிரார்த்தனையில் ஷிர்க் வைத்தல் என்றால், உணவு கேட்பதற்கு, அல்லது நோயைக் குணப்படுத்தக் கோருவதற்கு அல்லாஹ் அல்லாத நபிமார்கள் அவுலியாக்கள் போன்றவர்களிடம் கேட்பதாகும். பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“உமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை (உதவி வேண்டி) நீர் அழைக்காதீர். அவ்வாறு செய்தால் அச்சமயமே அக்கிரமக்காரர் (இணைவைப்பவர்)களில் நீரும் ஒருவராகி விடுவீர்” (10:106)
‘எவனொருவன் அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு நிகராக ஏற்படுத்தியவனாக இருக்கும் நிலையில் மரணிக்கின்றானோ, அவன் நரகம் பிரவேசிப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி.
இறந்தவர்களிடமோ, (உயிருள்ளவர்களில்) மறைவாக இருப்பவர்களிடமோ துஆக் கேட்பது ஷிர்க்காகும். பின்வரும் அல்குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாய் அமைகின்றது.
“அவனை (அல்லாஹ்வை)யன்றி எவற்றை நீங்கள் (ஆண்டவனென) அழைக்கின்றீர்களோ அவற்றுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை. அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவை செவியுறா; அவை செவியுற்ற போதிலும் உங்களுக்குப் பதிலளிக்கா; மறுமை நாளிலோ (இம்மையில் அவற்றை) நீங்கள் இணை வைத்ததையும் அவை நிராகரித்து விடும். யாவையும் அறிந்த (இறை)வனைப் போல் (அத்தெய்வங்கள்) எதனையுமே உங்களுக்கு அறிவிக்கா” (35:13,14)
அல்லாஹ்வுடைய ஸிபத்துகளில் இணைவைத்தல்:- இதில், நபிமார்கள், அவுலியாக்கள் முதலானோர் மறைவானவற்றை அறிவார்கள் என்று நம்பிக்கை கொள்வதாகும். “மறைவானவற்றின் சாவிகள் அவனிட (அல்லாஹ்விட)ந்தான் இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார்” (6:39)
நேசங்கொள்வதில் ‘ஷிர்க்’ வைத்தல்:- இது அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவுலியாக்களில் ஒருவரையோ, பலரையோ நேசிப்பதாகும். இதுபற்றிக் குர்ஆன் கூறுவதாவது.
“அல்லாஹ் அல்லாதவற்றை, அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்போர் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும் மூமின்களோ, அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள்” (2:165)
வழிபடுவதில் ‘ஷிர்க்’ வைத்தல்:- அனுமதி உண்டு என்ற நம்பிக்கையுடன் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் உலமாக்களுக்கும், மஷாயிகு (தலைவர்)களுக்கும் வழிபடுதல். குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.
“இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்” (9:31)
அல்லாஹ் ஹறாமாக்கியதை ஹலாலாக்குதல், அவன் ஹலாலாக்கியதை ஹறாமாக்குதல் ஆகியவற்றைக் கொண்டு மாறுசெய்வதில் மேலேயுள்ள வசனத்தில் கூறப்பட்டவர்களுக்கு வழிபடுவதையே ‘இபாதத்’ (வணக்கம்) என்று மேற்காட்டிய வசனம் கூறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
‘அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் அடியானுக்கு வழிபடக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
ஷிர்க்குல் ‘ஹுலூல்’ (இரண்டறக் கலப்பின் மூலம் இணை வைத்தல்):- இது, நிச்சயமாக அல்லாஹ் தனது படைப்புகளில் குடிகொண்டுள்ளான் என்று நம்பிக்கை கொள்வதாகும். (ஸிரியாவின் தலைநகர்) டமஸ்கஸில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இப்னு அரபியுடைய கொள்கையாக இது இருக்கின்றது. ‘அடியான் தான் இறைவன்; இறைவந்தான் அடியான்’ என்று அவர் கூறியுள்ளார்.
‘ஹுலூல்’ என்ற கொள்கைக் கொண்ட சூபிக் கவிஞன் ஒருவன் பின்வருமாறு பாடுகிறான்.
நாயும் பன்றியும் எங்களது இறைவனாகவே இருக்கின்றன. கிறிஸ்தவக் கோயிலிலுள்ள குருவும் அல்லாஹ்வாகவே இருக்கின்றனர்.
ஷிர்க்குத் தஸர்ருப்:- (தஸர்ருப் என்றால் அல்லாஹ்வுடைய பண்புகளை அவனுடைய சில அடியார்களுக்கு மாற்றுதல்)
அல்லாஹ்வுடைய சில கருமங்களை நிர்வாகம் செய்யக்கூடிய அதிகாரம் அவுலியாக்களுக்கு இருப்பதாக நம்பிக்கை கொள்வதாக இது இருக்கின்றது உதாரணத்துக்கு அப்துக் காதிர் ஜீலானிய்யி (ரஹ்) அவர்கள் சொல்வதாக முஹ்யித்தீன் மௌலிதின் ஏழாவது ஹிகாயத்தில் பின்வருமாறு வந்துள்ளது. (மொழிபெயர்ப்பாளர்)
ஷைக் (அப்துல் காதிர் ஜீலானிய்யி) அவர்கள் ஒரு சபையிலுள்ளோரை நோக்கி ‘சூரியன் ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து எனக்கு ஸலாம் சொல்லி, அன்றைய நாளில் உலகில் நடைபெறப் போவது என்ன என்பதை அறிவிக்காமல் உதிக்கமாட்டாது’ என்று கூறினார்.
அவுலியாக்கள் மீது வரம்பு மீறிய நம்பிக்கை கொள்வோர், அவர்களைக் ‘குதுபு’ (தலைவர்)கள் என்று கூறுவார்கள். பண்டயக்கால முஷ்ரிக்குகளிடத்தில் கேட்கப்பட்ட கேள்வியைப்பற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.
“(உலகின்) சகல காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அதற்கு அவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள்” (10:31)
(அவுலிய்யா பக்திகொண்ட இக்கால மக்கள் முற்கால முஷ்ரிக்குகளை விட மட்டரகமான நம்பிக்கையுடன் இருக்கின்றனர்)
பயப்படுவதில் ஷிர்க் வைத்தல்:- இந்த நம்பிக்கை, மரணித்த அவுலியாக்களில் சிலருக்கு அல்லது (தூரமான இடத்தில் உயிருடனுள்ள) மறைவிலுள்ள சிலருக்கு, சில ஆற்றல்கள் உண்டு என்றும், அவர்கள் தண்டனை வழங்குவார்கள் என்றும் நம்பி பயப்படுவதாகும். இது முற்கால முஷ்ரிக்குகளின் நம்பிக்கையாகும். இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“தன் அடியானுக்கு (வேண்டிய உதவிகளைச் செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவைகளைப் பற்றி (ப் பலவற்றைக் கூறி) உம்மைப் பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்)” (39:36)
கொடிய விலங்கினங்களுக்கும், விஷஜந்துக்களுக்கும், உயிருடனிருக்கும் கொடுமைக்கார மனிதனுக்கும், இதுபோன்ற வேறு ஏதாவது ஒன்றுக்கும் பயப்படுவது ஷிர்க்காக மாட்டாது.
ஆட்சியில் ஷிர்க் வைத்தல்:- இதுதான் இஸ்லாத்திற்கு எதிரான சட்டங்களை வெளியாக்கி, அவற்றை ஆகுமாக்குதல் என்பதாகும். அல்லது இஸ்லாத்தின் சட்டத்தைப் பொருத்தமற்றது என்று(ம் காலத்துக்கு ஒவ்வாதது என்றும்) கருதுவதாகும்.
ஷிர்க்குல் ‘அக்பர்’ (பெரிய இணைவைத்தல்):- இது நன்மைகளை அழித்து விடக் கூடியது. அல்லாஹ் இதுபற்றி பின்வருமாறு கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதல்லாத (குற்றத்)தைத் தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே எவ்ரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவன் வெகு தூரமான வழிகேட்டில் தான் இருக்கின்றான்” (4:116)
ஷிர்க்கில் பல வகைகள் உண்டு. பெரிய ஷிர்க்கு, சிரிய ஷிர்க்கு ஆகியன அவற்றில் உள்ளதாகும். அவற்றைத் தவிர்ப்பது நம்மில் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். நாம் எப்பொழுதும் மொழிந்துவரப் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
‘அல்லாஹ்வே! நாங்கள் அறிந்தவர்களாக உனக்கு எதனையும் இணையாக்குவதிலிருந்து உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறோம். நாங்கள் அறியாதவற்றுக்கும் உன்னிடம் பிழைபொறுக்கத் தேடுகிறோம். ஆதாரம்: அஹ்மத் (ஹஸன்)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.