அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்

சமூகப் பழக்கவழக்கங்களில் சில நம் சமுதாயத்தில் இறைமார்க்கத்தையும் விஞ்சி விட்டன. அதுபோல மக்களின் தவறான பழக்கங்களும், பாரம்பரிய நடைமுறைகளும் இறைச்சட்டங்களை எந்த அளவுக்கு மிகைத்து விட்டன எனில் யாருக்கேனும் ஷரீஅத்தின் சட்டங்களை நீ எடுத்துச் சொன்னால், அவற்றை ஆதாரத்தோடு நிரூபித்து, சான்றுகளையும் தெளிவு படுத்தினால் உடனே உன்னை பழமைவாதி, அடிப்படைவாதி, குடும்ப உறைவை குலைப்பவன், நல்ல எண்ணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்… என்றெல்லாம் அவதூறு கூறி விடுவர். அத்தகைய பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்.

சிறிய தந்தையின் மகள், மாமி மகள், தாய் மாமன் மகள், சின்னம்மா மகள், அண்ணன் – தம்பி மனைவி, சிறிய தந்தையின் மனைவி, மாமாவின் மனைவி போன்ற பெண்களுடன் முஸாஃபஹாச் செய்வது நம் சமுதாயத்தில் தண்ணீர் குடிப்பதை விடவும் சாதாரண விஷயமாக மாறி விட்டன. (தமிழ் நாட்டில் இந்தப் பழக்கம் இல்லை) மார்க்க ரீதியாக இச்செயல் எவ்வளவு ஆபத்தானது தெளிந்த நோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் அதைச் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் அவருக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவரது தலையில் இரும்பு ஊசியால் குத்துவதே மேல்’ அறிவிப்பவர்: மஅகல் பின் யஸார் (ரலி) நூல்: தப்ரானி

இச்செயல் நபி (ஸல்) அவர்கள் கூறியதுபோல கை செய்யும் விபச்சாரம் என்பதில் ஐயமில்லை. இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘கண்கள் விபச்சாரம் செய்கின்றன, கைகள் விபச்சாரம் செய்கின்றன, கால்களும் விபச்சாரம் செய்கின்றன, மர்ம உறுப்பும் விபச்சாரம் செய்கின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நூல்: அஹ்மத்

முஹம்மத் (ஸல்) அவர்களை விட தூய உள்ளம் கொண்டவர் உலகில் யாரேனும் உண்டா? அவ்வாறிருந்தும் ‘நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய மாட்டேன்’ என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அஹ்மத், தப்ரானியில் இதற்கு சான்றுள்ளது.

அண்ணலாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கரம் எந்தப் பெண்ணுடைய கரத்தின் மீதும் பட்டதே இல்லை. எனினும் வாய்மொழி மூலமே அவர்களிடம் (பெண்களிடம்) பைஅத் – உறுதிப் பிரமாணம் பெறுவார்கள். (முஸ்லிம்)

அறிந்து கொள்ளுங்கள்! சில கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவர்கள் ஒழுக்கமுள்ள தம் மனைவியரை, தம் சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யா விட்டால் விவாகரத்துச் செய்து விடுவதாக எச்சரிக்கின்றனர்.

இங்கு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது திரைக்கு அப்பால் நின்று கொண்டு கையில் ஒரு துணியைப் போட்டுக் கொண்டு முஸாஃபஹாச் செய்தால் அது கூடும் என்றாகி விடாது. நேரடியாகச் செய்வது, துணியை வைத்துச் செய்வது ஆகிய இரண்டும் தடுக்கப்பட்டவை தான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.