22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
22:66. இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
22:68. (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.
22:69. நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாமநாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”
22:70. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவுன் சுலபமானது.
22:71. மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.
22:72. இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.