9:163. மேலும், (நபியே!) கடலோரத்திலிருந்த ஓர் ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேட்பீராக! (தடுக்கப்பட்ட நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் பிடிப்பது தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் பிடித்து)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலிலிருந்து) மீன்கள் நீர்மட்டத்திற்கு மேலாக தங்கள் தலைகளை நீட்டிக் கொண்டு அவர்கள் முன் வந்தன. சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் அவை வருவதில்லை. இவ்வாறு அவர்கள் பாவங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணத்தால் அவர்களை நாம் சோதனைக்குள்ளாக்கினோம்.
9:164. இன்னும் அவர்களில் ஒருசாரார் (நல்லுபதேசம் செய்தவர்களிடம்) ‘அல்லாஹ் எவர்களை அழித்து விடுகிறவனாக அல்லது அவர்களை கடினமான வேதனையாக வேதனை செய்கிறவனாக இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள் என்று கூறியபொழுது அவர்கள், இதனால் நாம் உங்கள் இரட்சகனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் (அதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால் தவறிலிருந்து விலகி அல்லாஹ்வை) அஞ்சி விடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) எனக் கூறினார்கள்.
9:165. பின்னர் அவர்களுக்கு எதுபற்றி நினைவுபடுத்தப்பட்டதோ அதை அவர்கள் மறந்து (மீன் பிடிக்க முற்பட்டு) விட்டபோது தீமை செய்வதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தோரை நாம் காப்பாற்றினோம். அநியாயம் செய்தவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டும் நாம் பிடித்துக் கொண்டோம்.
9:166. ஆகவே, எதனை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தனரோ அதனை விட்டும் அவர்கள் வரம்பு மீறியபோது, ‘நீங்கள் இகழப்பட்டவர்களாக, குரங்குகளாகி விடுங்கள்’ என்று அவர்களுக்கு நாம் (சபித்துக்) கூறினோம்.
9:167. மேலும், (நபியே!) உமதிரட்சகன் அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே அவர்கள் மீது (ஆதிக்கம் வகிக்கும்படி) இறுதிநாள் வரையில் அவன் நிச்சயமாக அனுப்பி வருவான் என்று (அவர்களுக்கு) அறிவித்ததை (நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) நிச்சயமாக உமதிரட்சகன் (அவனுக்கு மாறு செய்து வந்தோரை) தண்டிப்பதில் மிக்க தீவிரமானவன்; மேலும் நிச்சயமாக (அவன் பால் மீளுகிறவர்களுக்கு) அவன் மிக்க மன்னிக்கிறவன்; நிகரற்ற அன்புடையவன்.