முடுக்கிவிடப்பட வேண்டிய ஏகத்துவப் பிரச்சாரங்கள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

1980 களுக்கு முன்னர் தமிழகம் – ஓர் பார்வை!: –

ஊருக்கு ஒரு தர்ஹா, மாதத்திற்கு ஒரு கந்தூரி விழா, வீட்டுக்கு ஒரு குல அவுலியா, ஒவ்வொரு வீட்டிலும் ‘தமிழகத்தின் தர்ஹாக்களைக் காண வாருங்கள்’ என்ற சங்கை மிக்க பாடல் ஓசைகள், அவுலியாக்களுக்கு கோழி, ஆடு போன்ற குர்பானிகள், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பாஸ்போர்டுகளை அவுலியாவின் கப்ருடைய சன்னிதானத்தில் வைத்து எடுத்தல், வீட்டுக்கு வீடு மவ்லிது மஜ்லிஸ்கள், தர்ஹாக்கள் தோறும் பேய் பிடித்தவர்களின் கூட்டம் இப்படியாக பலவித அனாச்சாரங்கள் பல்கிபெருகி இருந்தன.

ஆனால் இன்று அந்த சூழ்நிலைகளில் இருந்து தமிழகத்தில் உண்மையான மார்க்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக தமிழகத்தில் இஸ்லாமிய மார்க்கம் மறுமலர்ச்சி பெற்றுவிட்டது என்று நாம் கூறுவதற்கில்லை. ஏனென்றால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் எளிமையான தமிழ் மொழியில் இன்றைய காலக் கட்டத்தில் கிடைக்கப் பெற்றும் இவற்றைப் படித்தால் பாமர முஸ்லிம்களுக்கு புரியாது என்று கூறி அவர்களை இணை வைப்பு மற்றும் பித்அத்துகளில் மூழ்கியிருக்கச் செய்யும் போலி புரோகித மவ்லவிகள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதுவும் அவர்கள் முன்பை விட தீவிரமாக செயல்படுகிறார்கள். தவ்ஹீதை போதிக்கும் ஒரு சிலர் செய்கின்ற தவறுகளை வைத்துக் கொண்டு ‘பார்த்தீர்களா இவர்களை’ என்று அவர்களை உதாரணம் காட்டியே பாமர மக்களை வழிகெடுத்து வருகிறார்கள் இந்த மாபாதக புரோகிதர்கள். சில முஸ்லிம் ஊர்களில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மாநாடு இன்றளவும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவ்வகை மாநாடுகளில் ஏக இறைவனை மட்டுமே வழிபடக் கூடியவர்களை கடுமையாக விமர்சித்துக் கொண்டுதானிக்கின்றனர்.

தமிழகத்தின் பல முஸ்லிம் ஊர்களின் ஜமாஅத்கள் இன்னும் ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது. அவர்களை மீறி ஒன்றும் செய்ய சக்தியற்றவர்களாகவே இன்றைய ஏகத்துவப் பிரச்சாரர்களும் அதைப் பின்பற்றுபவர்களும் இருக்கின்றார்கள். தவ்ஹீதின் வளர்ச்சியில் 1980 மற்றும் 1990 களில் இருந்த வேகங்கள் 2000 களில் பெருமளவு குறைந்து விட்டது. காரணம் ஏகத்துவத்தைப் போதிப்பவர்களே சுய நலத்தின் காரணமாக சிறு சிறு பிரச்சனைகளுக்காக ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு பல பிரிவுகளாக பிரிந்து ஏகத்துவப் பிரச்சாரத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர்.

இணை வைப்பவர்களிடம் தவ்ஹீதைப் பற்றி எடுத்துக் கூறினால், ‘முதலில் உங்களுக்கிடையில் கொள்கையில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டு பிறகு எங்களுக்கு அறிவுரை கூறவாருங்கள்’ என்று அவர்கள் கூறும் அளவிற்கு தற்போது நிலைமை மோசமாகிவிட்டது.

ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைத் தவிர வேறு யாருடைய வழிமுறைகளையும் பின்பற்ற மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்திருக்கும் என தருமை சகோதர சகோதரிகளே! இதுவே நாம் ஒன்றுபடும் தருணம். அற்ப உலகாயாதங்களுக்காகவும் பதவி சுகத்துக்காகவும் இயக்க தலைமைப் பதவிக்காகவும் மார்க்கத்தை விட்டுக்கொடுக்காமல் அல்லாஹ்வுக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தேயாக வேண்டும்.

இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமான ஷிர்க் எனனும் இணைவைத்தலிலும் மார்க்கத்தைப் பல கூறு போடக் கூடிய பித்அத்களிலும் இன்றளவும் உழன்றுகொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளை அவற்றிலிருந்து விடுவிக்கவும், முஸ்லிம் சமுதாயத்தை வேரறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய எதிரிகளிடமிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவும் நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான் :

“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” (அல்-குர்ஆன் 103:1-3)

நமக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை அல்லாஹ்வுக்காக விட்டுக்கொடுத்து பல பிரிவுகளாக பிரிந்திருக்கும் நாம் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு அதற்குரிய ஆற்றல்களை தந்தருள போதுமானவன்.

ஆக்கம்: புர்ஹான்

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , . Bookmark the permalink.