“நீங்கள் நன்மை செய்தால் அது உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே கேடாகும்”. (அல்குர்ஆன்: 17:7)
“எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை”. (அல்குர்ஆன்: 41:46)
“நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதேயில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”. (அல்குர்ஆன்: 39:7)
“எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்”. (அல்குர்ஆன்: 27:40)
“இதற்காக நீங்கள் எனக்கு நன்றி செலுத்தினால் நான் என்னுடைய அருளை பின்னும் நான் அதிகப்படுத்துவேன். நீங்கள் என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும். மேலும் நபி மூஸா தம் மக்களை நோக்கி நீங்களும் உலகிலுள்ள மக்கள் யாவரும் இறைவனுக்கு முற்றிலும் மாறு செய்த போதிலும் அவனுக்கொன்றும் நஷ்டமேற்பட்டு விடாது. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் இல்லாதவனும், புகழுக்குரியவனுமாக இருக்கிறான்”. (அல்குர்ஆன்: 14:7-8)
“நிராகரிப்பால் அவர்கள் விரைந்தோடுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்து விட முடியாது” (அல்குர்ஆன்: 3:176).
“எவர்கள் (மக்காவாகிய) அங்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வாலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் இதை நிராகரித்தால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை”. (அல்குர்ஆன்: 3:97)
“அவர்கள் இஸ்லாத்தை தழுவியதின் காரணமாக உம்மீது (நபியின் மீது) ஏதோ பேருபகாரம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர். நீர் கூறும்! நீங்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததினால் எனக்கு உபகாரம் செய்ததாகக் கருதாதீர்கள். எனினும் விசுவாசத்தின் நேர்வழியில் உங்களைச் செலுத்தியதின் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்ததாக எடுத்துரைக்கிறான். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதனை நன்கு அறிந்து கொள்வீர்கள்”. (அல்குர்ஆன்: 49:17)
“நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வுடைய தூதரிருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு வழிபடுவதென்றால் நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இருப்பினும் அல்லாஹ் ஈமானை விசுவாசத்தை விரும்பும்படி உங்களை ஆக்கினான். உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கி வைத்தான். மேலும் குஃப்ரையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கி வைத்தான். இத்தகையோர் தாம் நேரான வழியில் இருக்கின்றனர். (மிகச் சிறந்த இவ்வர்ணிப்பை அடைவது) அல்லாஹ்வுடைய கிருபையும், அருளுமாகும். அவன் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கின்றான்”. (அல்குர்ஆன்: 49:7-8)