அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்

அல்லாஹ் கூறுகிறான்: –

“(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல் குர்ஆன் 7:205)

இந்த வசனத்தில் வசனம் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்: –

மேற்கண்ட வசனத்தில், திக்ரு செய்யும் போது மெதுவாகவும், பணிவோடும், உரக்கச் சப்தமின்றியும், அச்சத்தோடும் செய்ய வேணடும் என இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் சூஃபியாக்கள் திக்ரு செய்கிறோம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான ஹல்கா போன்றவைகளைச் செய்யும் போது ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், இருந்து விட்டு அல்லாஹ்வை திக்ரு செய்ததாக எண்ணிக் கொள்கின்றனர்.

இதில் வேதனையான விசயம் என்னவென்றால் சூஃபியாக்கள் கொள்கையைப் பற்றித் தெரியாதவர்கள் கூட அறியாமையினால் தாங்களும் இறைவனை திக்ரு செய்வதாக எண்ணிக்கொண்டு இதுபோன்ற மஜ்லிஸ்களில் கலந்து கொள்கின்றனர். காரணம் என்னவெனில் அவர்கள் ஊரில் உள்ள பெரும்பாண்மையானவர்கள் இந்த மாதிரியான பித்அத்களைச் செய்வதினால் அவர்களும் இதையும் மார்க்கம் என்று கருதுகின்றனர். உதாரணமாக, இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நான் கூட சிறுவயதில் சூஃபியா கொள்கைகளைப் பற்றிய அறியாமையினால், எங்கள் ஊரில் பெரும்பாலோர் செய்வது போன்று, “ஹல்கா” என்ற பெயருடைய திக்ரு மஜ்லிஸ்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ் என் போன்றவர்கள் அறியாமையினால் செய்த பாவங்களை மன்னித்தருள வேண்டும் என இறைஞ்சுகிறோம்.

இவர்கள் நபிவழிக்கு மாற்றமான பலவகையான திக்ரு முறைகளை செய்கிறார்கள். அவைகளில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் குறிப்பாக கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் பிரபலமானவை ‘ஷாதுலிய்யா தரீக்கா’ மற்றும் ‘காதிரிய்யா தரீக்கா’ என்ற பிரிவுகளைச் சேர்ந்தவைகளாகும். இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ரு முறைகளில் மார்க்கத்திற்கு முரணான ஏராளமான செயல்களைச் செய்கின்றனர். இந்த வகை திக்ரு முறைகளில் ஷாதுலிய்யா தரீக்காவில் இவர்கள் செய்யக்கூடிய திக்ரு முறையைப் பற்றி சற்று பார்ப்போம்.

ஷாதுலிய்யா தரிக்காவின் ஹல்கா (திக்ரு?) முறை: –

இதில் முதலில் இவர்கள் வட்டமாக அமர்ந்துக் கொள்கின்றனர். பின்னர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற திக்ரை அந்த மஜ்லிஸின் தலைவர் கூறி ஆரம்பம் செய்ய அங்கு கூடியிருப்போர் அனைவரும் உரத்த குரலில் அதை கூறுகின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை அவர்கள் கூறி முடித்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒவ்வொருவரும் தமது பக்கவாட்டில் உள்ளவரிடம் கையைக் கோர்த்துக் கொண்டு, தத்தமது உடல்களை அசைத்தவராக ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என கூறுகின்றனர். பின்னர் அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு அரபிப் பாடல்களை ‘பைத்து’ என்று பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது அன்றைய காலக்கட்டத்தில் வெளியாகியிருக்கும் சினிமாப் பாடலின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்துக் கொண்டு பாடுகின்றனர். அவ்வாறு பாடும் போது மற்றவர்கள் ‘அஹ்’ என்றும் ‘ஆஹ்’ என்றும் அந்த சினிமாப் பாடலின் இராகத்தில் அமைந்த அந்த அரபி பாடலுக்கு ஏற்றவாறு தமது உடலை அசைக்கின்றனர். இதில் வேதனை என்னவென்றால் அவ்வாறு ஆடும் போது ‘சுதி’ (அவர்கள் பாஷையில் ‘ஜதப்’ என்கின்றனர்) ஏற்றுவதற்காக சிலர் வேகமாக கையைத் தட்டுகின்றனர். பின்னர் அவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரும் உரத்தகுரலில் ‘யா லத்திஃப்’ என்று கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு சில ஆயத்துக்களை ஓத அக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பாத்திஹா ஒதி அந்த திக்ரு? முறையை நிறைவு செய்கிறார்.

அல்லாஹ்வோ, அவனது ரஸுலோ காட்டித் தராத நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் இவர்கள் ‘அல்லாஹ்’ என்ற அழகிய திருநாமத்தை கூட ‘ஆஹ்’ என்றும் ‘அஹ்’ என்றும், ‘ஹு’ என்றும் திரித்து தனித்தனியாக உச்சரித்து, திக்ரு செய்வதயையே கேலிக் கூத்தாக்குகின்றனர். அல்லாஹ்வின் பெயரை இவ்வாறு திரித்துக் கூறுபவர்களைப் பற்றி குர்ஆனிலே அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன: அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களைத் (திரித்துத்) தவறாகப் பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்- அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்”
அல்குர்ஆன் (7:180)

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கத்து நிராகரிப்பாளர்களின் செயலான கைத் தட்டுதலை வணக்கமாக கருதுபவர்களைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

‘அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) ‘நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள’ (என்று).”
(அல் குர்அன் 8:35)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: –

“மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ர்) செய்யுங்கள்: நீங்கள் செவிடனையோ மறைவானவனையோ பிரார்த்திக்க வில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்” அறிவிப்பவர்: அபூமுஸா அல் அஷ்அரி (ரலி) , ஆதாரம்: புகாரி

இவர்கள் செய்யக்கூடிய இந்த வகையான திக்ருமுறைகளை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத்தரவில்லை. மாறாக அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட மார்க்கத்தில் இவ்வாறு புதிய அமல்களை உருவாக்குபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: –

‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’

“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

அல்லாஹ்வின் பெயரை திரிப்போர்களின் கூட்டத்தை விட்டு தவிர்ந்தவர்களாக, அல்லாஹ் மற்றம் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில், அச்சத்தோடும், அமைதியாகவும், உரக்க சப்தமில்லாமலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் நல்வழியில் நம்மை சேர்த்தருள அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

நன்றி: சுவனத்தென்றல்

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்

  1. Burhan says:

    மார்க்கம் அறியா பாமர மக்கள் தான் இஸ்லாத்தில் இல்லாத இந்த அனாச்சாரமான செயல்களைச் செய்கின்றார்கள் என்றால் ஏழு வருடங்கள் மதராஸாக்களில் படித்துவிட்டு தம்மை ஆலிம் என பீற்றிக் கொள்ளும் இந்தப் புரோகித மவ்லவிகளும் இறந்தவர்களின் 7 ஆம் நாள், 40 ஆம் நாள், 6 மாத மற்றும் வருட ஃபாத்திஹாக்களின் போது நடைபெறும் இவ்வகை ‘ஹல்கா’ வில் (திக்ரு?களில்) சுவையான கறி சோறு கிடைக்குமே என்று இறைவனுக்கு இணை வைக்கும் இந்த மாபாதக செயல்களைக் கூட கண்டிக்காமல் இருக்கின்றனர்.

    அவர்கள் 7 வருடம் படிப்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த கல்வியாக இருந்தால் அல்லவா இந்த அனாச்சாரங்களைக் களையப்போகிறார்கள்!

  2. M.Mohamed Abbas says:

    அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்…

    ‘அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் ‘ஸகீனா’ என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்

    அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, ‘இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்’ என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள்.

    பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் – அவன் மிக அறிந்தவன் – என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள்.

    அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள்.

    பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள்.

    அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள்.

    பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக!’ என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று.

    ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?’ என்றார்கள். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்’ என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்’ எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்)

    மேற்கண்ட ஹதிஸ்கள் எல்லாம் சகோதரர்கள் படிக்கவில்லை அதனால் தான் அவர்கள் செய்யும் நல் அமல்கள் எல்லாம் தவறாக தெரிகிறது.. அவர்கள் சரியாக 7 வருடம் படித்ததின் காரணத்தால் அவர்கள் சரியாக தான் செய்கிறார்கள், சகோதரர்களுக்கு ஹசன்பின் தாபித்(ரலி),க.’.ப் பின் சுகைர்(ரலி),அப்துல்லா பின் ரவ்ஹா(ரலி),அபு சுப்யான்(ரலி) அவர்களை பற்றி தெரியவில்லை. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சரியாக படியுங்கள், சும்மா தனக்கு எல்லாம் தெரியும் என்று ஏதோ எழுதி இஸ்லாத்தின் ஒற்றுமையை பிரித்து விடாதீர்கள், மறைவான விசயம் அல்லாவும்,அல்லாஹ் அறிவித்து வைத்தால் ரஸீல்(ஸல்) மட்டும் அறிந்தவர்கள், வேறு எவர்களும் அறியமாட்டர்கள்

  3. Burhan says:

    அன்பு சகோதரர் முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு,

    வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

    மிக அழகிய முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தமைக்காகவும் சமுதாய ஒற்றுமையில் அக்கரைக் கொண்டதற்காகவும் அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாகவும்.

    எனதருமை இஸ்லாமிய சகோதரரே!

    முஃமினான ஒவ்வொருவர் மீதும் இறைவனை நினைவு கூர்வது கடமையாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் :-

    “ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:30)

    “(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!” (அல்-குர்ஆன் 13:28)

    ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள். (அல்-குர்ஆன் 33:41-42)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    ‘அல்லாஹ்வை துதிப்பவனுக்கும், துதிக்காதவனுக்கும் உவமை உயிருள்ளவனையும், இறந்தவனையும் போன்றதாகும்’ (ஆதாரம் புகாரி)

    இது போல் இன்னும் பல வசனங்களும் நபி மொழிகளும் இறைவனை திக்ரு செய்வதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. திக்ரு செய்வது என்பது ஒரு இபாதத் (வணக்கம்) ஆகும்.

    நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முக்கிய இரண்டு நிபந்தனைகள் மிகவும் அவசியமாகும். அவைகளாவன: அமல்களை இறைவனுக்காகவே செய்கின்றேன் என்ற இக்லாஸோடு (தூய எண்ணத்தோடு) செய்ய வேண்டும். இரண்டாவது, அந்த அமல் நபி (ஸல்) அவர்களால் காட்டித் தந்த அமலாகவும் மேலும் அந்த அமலை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எப்படி செய்ய வேண்டும் என்று காட்டித் தந்ததார்களோ அது போன்றும் செய்ய வேண்டும். இதற்கு மாற்றமாக செய்யும் எந்த அமலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (பார்க்கவும் : http://suvanathendral.com/portal/?p=77 )

    சரி. இப்போது இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திக்ரு முறைகள் நபி (ஸல்) அவர்களாலோ அல்லது அவர்களின் தோழர்களாலோ அல்லது அவர்களுககுப் பின் வந்த தாபியீன்கள் அல்லது தபஅ தாபியீன்களாலோ பின்பற்றப்பட்டதா என்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்!

    இஸ்லாத்திற்கு அறவே தொடர்பில்லாத சூஃபித்துவக் கொள்கையுடையவர்களால் பின்பற்றப்பட்டுவரும் பல தரீக்காக்களின் பெயரில் செய்யப்படும் திக்ரு முறைகள் மார்க்கத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது இல்லையா? சிந்தியுங்கள் சகோதரரே!

    இந்த திக்ரு முறைகளைச் செய்பவர்கள் இஸ்லாம் வெறுக்கும் காரியங்களை அல்லவா செய்கின்றார்கள்?

    அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே தன் பெயரைத் திரித்துக் கூறாதீர்கள் என்று கூறியிருக்க (7:180) இந்த தரீக்காவாதிகளோ அல்லாஹ் என்ற பெயரை திரித்து ‘ஹு ஹு’ அல்லது ‘யா மன் ஹூ’ அல்லது ‘ஹக் தூ ஹக்’ அல்லது ‘அஹ் அஹ்’ அல்லது ‘ஆஹ் ஆஹ்’ என்றும் கூறுவதோடல்லாமல் இவற்றை உரக்க கூவுகின்றனர் அல்லவா?

    இவைகள் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளா? சற்று நிதானமாக சிந்தியுங்கள் சகோதரரே! அபூமூஸல் அஷ்அரி (ரலி) அவர்கள் கூறினார்கள்: –

    “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயனம் சென்றோம். அப்போது ஓடைகளைக் கடக்கும் போதெல்லாம் சப்தமாகத் தக்பீர் கூறினோம். உடனே நபி (ஸல்) அவர்கள், உங்களுக்குள்ளால் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செவிடனையோ எங்கேயோயிருப்பவனையோ அழைக்கவில்லை. மாறாகச் செவியேற்பவனும் அருகிலிருப்பவனுமான அல்லாஹ்வையே அழைக்கிறீர்கள்” ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

    மேலும் இந்த வகை திக்ருகளில் எல்லோரும் எழுந்து நின்று உடலசைத்து ஆடியவர்களாக ‘ஆஹ் ஆஹ்’ என்று கத்தும் போது சிலர் ஷாதுலி நாயகத்தைப் புகழ்ந்து பாடுகின்றனரே! அவர்கள் இறைவனை நினைவு கூறுகின்றனரா அல்லது ஷாதுலி நாயகத்தையா? மேலும் இந்தப் பாடல்களில் இறைவனுக்கு இணை வைக்கக் கூடிய வரிகள் இருக்கின்றனவே! இவைகள் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகளா?

    மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்களே! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : –

    “நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

    “(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத் (மேலும் பார்க்கவும் : http://suvanathendral.com/portal/?p=29 )

    எனவே நாம் கூறுவது என்னவென்றால்,

    எல்லா நேரமும் இறைவனை நினைவு கூறுவது நம்மீது கடமையாகும். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எவற்றைக் கூறி இறைவனை நினைவு கூற வேண்டும் என்று கற்றுத் தந்தார்களோ அவற்றைக் கூறி இறைவனை திக்ரு செய்ய வேண்டும். இதல்லாத மற்றவைகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்ட பித்அத்தான செயல்கள் என்பதை விளங்கி அவற்றிலிருந்து தவிர்ந்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

    “பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, தர்மம், உம்ரா, குர்பானி, தீனுக்கான முயற்சிகள், தீனில் செலவழித்தல், அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. குழைத்த மாவில் இருந்து தலைமுடி எவ்வளவு இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதுபோல் பித்அத் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவான்” அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா

    முஸ்லிம்கள் பிளவு பட்டுவிடக் கூடாது என்பதில் தங்களைப் போலவே நாமும் அதிக அக்கரை உள்ளவர்களாக இருக்கிறோம். அதே நேரத்தில் எனதருமை மார்க்க சகோதரர்கள் இஸ்லாத்தில் புதிதாக தோன்றிய ஷாதுலிய்யா, காதிரிய்யா, நக்ஸபந்தியா போன்ற தரீக்காக்களின் பெயரில் புதிய புதிய வணக்க முறைகளைத் தோற்றுவித்து எங்கள் தரீக்கா தான் சிறந்தது என்று அவர்களுக்குள் பெருமை பாராட்டிக் கொண்டு பிரிந்து விடாதீர்கள் என்று கூறுகிறோம். (பார்க்கவும் : http://suvanathendral.com/portal/?p=32 )

    நபி (ஸல்) அவர்களின் கூற்றுக் கேற்ப அல்-குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் பின்பற்றி இறைவன் நமக்கு சூட்டிய பெயரான ‘முஸ்லிம்கள்’ என்ற ஒரே சமுதாயத்தின் கீழ் வர அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

Comments are closed.