ஷபாஅத்
பரிந்துரை செய்வது என்பது ஷபாஅத் என்பதன் பொருளாகும். அதாவது மறுமை நாளில் மனிதர்களைத் தண்டனையிலிருந்து காக்கவும், தண்டனையைக் குறைக்கவும் பிரதானமாக அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தலை இது குறிக்கிறது.
அல்லாஹ் கருணை நிறைந்தவன். எனவே முடிந்தளவு அதிகமான மனிதர்கள் சுவர்க்கத்துக்குச் செல்வதையே அவன் விரும்புகிறான். அதற்கு அவன் பல்வேறு வழிகளை வைத்துள்ளான். அவற்றில் ஒன்றாகவே ஷபாஅத் (பரிந்துரை செய்தல்) அமைந்துள்ளது.
அதேவேளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தல், அப்பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளல் என்பது சில அடியார்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் உயர்ந்த கண்ணியமாகவும் அமைந்துள்ளது.
பரிந்துரை செய்தல் இரு நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. முதலாவது பரிந்துரைக்கு உட்படுபவர் இறைநிராகரிப்பில், அல்லது இணைவைத்தலில் ஈடுபட்டவராக மரணித்திருக்கக் கூடாது. அல்குர்ஆன் இதனைக் கீழ்வருமாறு கூறுகிறது :
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான். இதைத்தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுபவர்களுக்கு மன்னித்து விடுகிறான்.” (ஸூரா நிஸா : 48)
“அண்மித்து விட்டிருக்கும் அந்நாள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக. அன்று மக்கள் கவலையில் மூழ்கி இதயங்கள் தொண்டையை அடைத்து நிற்கும். அப்போது, அநியாயக்காரர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் யாருமிருக்க மாட்டார்கள். ஏற்றுக்கொள்ளப்படத் தக்க எப்பரிந்துரையாளனும் அவர்களுக்குக் கிடைக்கவும் மாட்டான்,” (ஸூரா காஃபிர் : 18)
அல்லாஹ்வின் அனுமதியும் திருப்தியும் பெற்றோரே பரிந்துரை செய்ய முடியும் என்பது இரண்டாவது விஷயமாகும். இத்தகையவர்களது ஷபாஅத் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட முடியும். இதைக் கீழ்வரும் இறைவசனம் விளக்குகிறது :
“அந்நாளில் பரிந்துரை எதுவும் பயனளிக்க மாட்டாது. கருணைமிக்க இறைவன் யாருக்கு அனுமதியளிக்கிறானோ, யாருடைய பேச்சைக் கேட்க விரும்புகிறானோ அவருடைய பரிந்துரையைத் தவிர.” (ஸூரா தாஹா : 109)
ஷபாஅத் சம்பந்தமான ஹதீஸ்களை விரிவாக நோக்கும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், மலாயிகத்து (வானவர்) களுக்கும், அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான சில அடியார்களுக்கும் ஷபாஅத் இருப்பதாக அறிய முடிகிறது.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘எனது ஷபாஅத் எனது சமூகத்தில் பெரும் பாவங்கள் செய்தோருக்கு உரியதாகும்.’ (ஆதார நூற்கள் : ஸுனன் திர்மிதி, ஸுனன் அபூதாவூத்)
இத்தகைய ஹதீஸ்கள் ஊடாக அறிஞர்கள் ஷபாஅத்தை கீழ்வரும் ஐந்து பிரிவுகளாக வகுத்துள்ளனர் :
1. மிக உயர்ந்த ஷபாஅத் : இது அனைத்து மனிதர்களுக்காகவும், மஹ்ஷர் வெளியின் பயங்கரத்திலிருந்து பாதுகாக்கவும், விசாரணையைத் துரிதப்படுத்துவதற்குமாக அமையும்.
2. முஃமின்களில் ஒரு பிரிவினரை கேள்வி, விசாரணையின்றியே சுவர்க்கம் செல்ல அனுமதிக்குமாறு செய்யப்படு ஷபாஅத்.
இவ்விரண்டு ஷபாஅத்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியதாகும்.
3. சுவர்க்கவாசிகள் சிலருக்கு அவர்கள் சுவர்க்கத்தில் இருக்கும் தரத்தை உயர்த்துவதற்கான ஷபாஅத்.
4. முஃமின்களாயினும் செய்த பாவங்களால் நரகம் செல்வதற்குத் தகுதியாக அமைந்தவர்கள். இவர்கள் ஷபாஅத் மூலம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளின் நரகம் செல்லாது தப்பிவிட முடியும்.
5. நரகில் வீழ்ந்து தண்டனை அனுபவிக்கும் முஃமின்களில் ஒரு பகுதியினரை அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை முடியும் முன்னரே நரகிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான ஷபாஅத்.
இந்த ஷபாஅத்களை அல்லாஹ் ஏற்பதும், மறுப்பதும் அவனது எல்லையற்ற கருணைக்கும், துளியும் பிசகாத நீதிக்கும் உட்பட்டதாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ் அவனது எல்லையற்ற கருணையால் இந்த ஷபாஅத்துகளுக்கு உட்படுவோரில் எம்மையும் ஆக்குவானாக.
இந்த நூலை ஆக்க உதவியாக இருந்த நூல்கள் :
அல் அகீததுல் இஸ்லாமியா வ உஸுஸுஹா – ஷெய்க் அப்துர்ரஹ்மான் ஹபன்னகதுல் மைதானி
குப்ரல் யகீனிய்யாத்தில் கவ்னிய்யா – கலாநிதி முஹம்மத் ஸயீத் ரமளான் அல் பூதி
மஷாஹிதுல் கியாமா பில் குர்ஆனில் கரீம் – ஷஹீத் செய்யத் குதுப்
அகீதத்துல் முஸ்லிம் – ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி
பீ ளீலாலில் குர்ஆன் – ஷஹீத் செய்யத் குதுப்
மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.
இனிதே முடிவுற்றது.