ஷிர்க்குடன் தௌஹீதுக்கு ஏற்பட்ட யுத்தம், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குமாறும், சிலை வணக்கத்தைக் கைவிடுமாறும் நூஹ் (அலை) அவர்கள் தனது மக்களை அழைத்த காலந்தொட்டு ஏற்பட்டதாகும். அம்மக்களிடையே நூஹ் (அலை) அவர்கள் 950 வருடகாலங்கள் வாழ்ந்து தௌஹீதுப் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். பின்வருமாறு அல்குர்ஆன் கூறுகின்றவாறு அவர்களுடைய மறுப்பு இருந்தது.
“(அவர்களில் உள்ளவர்கள் தங்களில் உள்ள மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்’ (என்னும் விக்கிரத்)தையும் (விட்டு விடாதீர்கள்.) ‘ஸுவாவு’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ரு’ (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டு விடாதீர்கள் என்று கூறி நிச்சயமாக அநேகரை வழிகெடுத்து விட்டனர்” (71:23,24)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவ்வசனங்களுக்கு அளிக்கும் விளக்கத்தை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இவ்வசனத்தில் கூறப்பட்ட பெயர்கள் நூஹ் (அலை) அவர்களது கூட்டத்திலிருந்த நல்லடியார்களுடையதாகும். அவர்கள் மரணித்த பின்னால், அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் (அவர்களது நினைவாக) ஏதேனும் நட்டு அடையாளமிடுமாறு, ஷைத்தான் அம்மக்களைத் தூண்டினான். அவர்கள் அவ்வாறே நட்டார்கள். ஆனால் அவர்கள் அவற்றை வணங்கவில்லை. இந்தச் சமூகம் இறந்த பின்னால் அடுத்து வந்த சமூகம் அதனை வணங்க ஆரம்பித்தது. (இதுதான் சிலை வணக்கத்தின் தோற்றமாகும்)
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின்னால் பல தூதர்கள் வந்தனர். அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், வணக்கத்துக்குத் தகுதியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதை விட்டு விடுமாறும் அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தனர். (சகோதரனே!) குர்ஆனின் பக்கம் செவிதாழ்த்து! அது அவர்களைப்பற்றி உனக்குத் தகவல் சொல்லும்.
“‘ஆத்’ (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய ரஸூலாக அனுப்பினோம்) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா?” என்று கூறினார்” (7:65)
“‘ஸமூது’ (என்னும் மக்)களிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (நம்முடைய ரஸூலாக அனுப்பி வைத்தோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு நாயன் இல்லை” என்று கூறினார்” (11:60)
“‘மத்யன்’ (என்னும் ஊர்) மக்களுக்கு, அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பினோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு நாயன் உங்களுக்கு இல்லை” என்று கூறினார்” (11:84)
“(நபியே!) இப்றாஹீம் (அலை) தன்னுடைய தந்தையையும் ஜனங்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாரும். ‘நிச்சயமாக நான் நீங்கள் வணங்குபவைகளை விட்டு விலகிக் கொண்டேன்; எவன் என்னைச் சிருஷ்டித்தானோ, அவனைத்தவிர, (அவனையே நான் வணங்குவேன்;) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான் (என்றும் கூறினார்.)” (43:26,27)
நபிமார்கள் கொண்டுவந்த மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்களாகவும் தடை செய்பவர்களாகவுமே முஷ்ரிக்குகள் இருந்துள்ளனர். அந்த நபிமார்கள் தங்களால் பலம் கொண்டளவு எதிரிகளை எதித்துப் போராடினர்.
எங்கள்பால் அனுப்பப்பட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், நம்பிக்கைக்குரியவர்; உண்மையுரைப்பவர் என்றெல்லாம் நபித்துவத்துக்கு முன்னால் பிரபல்யமடைந்திருந்தனர். அம்மக்களை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வணக்கம் செலுத்துமாறும், அவர்களுடைய முன்னோர்கள் வணங்கி வழிபட்டு வந்த சிலை வணக்கத்தை விட்டு விடுமாறும் நபியவர்கள் சொன்னபோது, அவர்களுக்குச் சூட்டியிருந்த உண்மை பேசுபவர், நம்பிக்கைக்குரியவர் என்ற புகழாரங்களையெல்லாம் மறந்து, பொய்யன், சூனியக்காரன் என்றெல்லாம் அம்மக்கள் சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுடைய புறக்கணிப்பைப்பற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப்பற்றி அவர்கள் ஆச்சர்யப்பட்டு, ‘இவர் பொய் சொல்லும் ஒரு சூனியக்காரர்தான்’ என்று (உம்மைப் பற்றி) இந்நிராகரிப்போர் கூறுகின்றனர். என்ன! இவர் (நாம் வணங்கும்) தெய்வங்கள் யாவற்றையும் (நிராகரித்து விட்டு வணக்கத்துக்குரியவன்) ஒரே ஆண்டவன் தான் என்று ஆக்கி விட்டாரா? மெய்யாகவே இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான் (என்று கூறி,) அவர்களில் உள்ள தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி ‘இவரை விட்டு) நீங்கள் சென்று விடுங்கள்; உங்கள் தெய்வங்களில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்களுடைய தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இக்காரியம் நிச்சயமாக (உங்களுக்கு விரோதமாக)க் கருதப்பட்டதாகும்’ என்று (கூறிக் கொண்டே) சென்று விட்டனர்” (38:4,5,6)
“இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தவர் (ஜனங்)களும் (அவர்களிடம்) எந்தத்தூதர் வந்த போதிலும் (அவரை) ‘சூனியக்காரர்’ அல்லது ‘பைத்தியக்காரர்’ என்று அவர்கள் கூறாமல் இருக்கவில்லை. இவ்வாறு (கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! அன்று அவர்கள் (இயற்கையிலேயே) அக்கிரமக்கார ஜனங்களாக இருக்கின்றனர்” (51:52,53)
தௌஹீதின்பால் மக்களை அழைத்த நபிமார்களின் நிலைபற்றியும், அவர்களையும், அவர்கள் கொண்டு வந்தவற்றையும் பொய்யாக்கிப் புறக்கணித்துப் பல அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்த பொய்யர்களின் நிலைபற்றியும் மேலேயுள்ள வசனங்கள் அழகாகக் கூறுகின்றன.
எமது இக்காலத்தில் ஒரு முஸ்லிம் (அல்லது ஒரு ஜமாஅத்) ஏனைய முஸ்லிம் சகோதரர்களுக்கு நற்பண்புகள், உண்மை நம்பிக்கைப் போன்றவற்றைப் போதித்தால் இங்கு எதிர்ப்போ இடையூறோ வரமாட்டாது. நபிமார்கள் ரஸூல்மார்கள் செய்த போதனையாகிய தௌஹீதின் பக்கம் மக்களை அழைக்க முற்பட்டாலோ எதிர்ப்புக் கிளம்பிவிடும். அவன்மீது பல பொய்யான கதைகளையெல்லாம் கட்டி விடுவார்கள். அவனுடைய அழைப்பை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அவனை ‘வஹ்ஹாபி’ என்றும் சொல்லுவார்கள். தௌஹீதுடையக் கருத்தைக் கூறும் குர்ஆன் வசனமொன்றை மொழிந்தாலும் ‘இது வஹ்ஹாபியத்தான வசனம்’ என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
‘உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு’ என்ற ஹதீஸை அவர்கள் முன் கூறினால் இது வஹ்ஹாபியத்தான ஹதீஸ் என்று கூறிவிடுவார்கள். தொழுகின்றவன் நெஞ்சின் மீது கையை வைத்து விட்டாலும் அல்லது அத்தஹிய்யாத்தின் போது விரலை ஆட்டி விட்டாலும் அவனை வஹ்ஹாபி என்று சொல்லி விடுவார்கள்.
அல்லாஹ்வை மட்டுமே உதவிக்கு அழைத்து, அவனுக்கு மட்டுமே வணக்கம் செலுத்தி நபி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவை நிலைநாட்டுகின்ற ஒருவனுடைய அடையாளமாக ‘வஹ்ஹாபி’ என்ற சொல் ஆகிவிட்டது. இது தௌஹீதுடைய அடிப்படையில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் செய்த ஒரு பேரருளாகும்.
தௌஹீதுப் பிரசாரகர்கள், பின்வரும் அல்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் தனது ரஸூலுக்குச் சொன்னபடி அந்த ரஸூல் (ஸல்) நடந்தவாறு தமது நடைமுறையை அமைத்துப் பொறுமையாக நடந்து கொள்ளல் அவசியமாகும்.
“(நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றம் குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகிவிடும்” (73:10)
“உமது இறைவனின் கட்டளைக்காக நீர் பொறுத்திரும். அவர்களிலுள்ள யாதொரு பாவியையும் நன்றி கெட்டோரையும் நீர் பின்பற்றாதீர்” (76:24)
முஸ்லிம்கள் அனைவரும் தௌஹீதை ஒப்புக்கொண்டு அதன் பிரசங்கிகளை நேசிக்க வேண்டும். ஏனென்றால் தௌஹீத் என்பது எல்லா ரஸூல்மார்களினதும் தஃவத்தா (பிரசாரமா)கும். இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய தஃவத்தும் இதுவேயாகும்.
எவனொருவன் நபி (ஸல்) அவர்களை நேசிக்கிறானோ, அவன் தௌஹீதை நேசித்தவனாவான். எவன் தௌஹீதுடன் கோபம் கொள்கிறானோ, அவன் நபி (ஸல்) அவர்களுடன் கோபம் கொள்பவனாவான்.