1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘அபூ ஸைத் என்பவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள்.
1602. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, ‘வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..” என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), ‘என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.