தௌஹீதும் அதன் பிரிவுகளும்

அல்லாஹ் தனக்கு அடிபணிவதற்கென்றே படைத்தவை அனைத்தும் (வேறெவருக்கும் வழிபடாமல்) அவனுக்கு மட்டுமே வழிபடுவதில் ஒருமைப் படுத்துவதற்கே தௌஹீத் எனப்படும். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

“என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை” (51;56)

அதாவது ‘வணக்கத்தில் என்னைத் தனிமைப்படுத்துவதற்கும், பிரார்த்தனையில் என்னை ஒருமைப்படுத்துவதற்குமே நான் படைத்தேன்’ என்பதாக அல்லாஹ் கூறுகிறான். ‘முஹம்மத் (ஸல்) அவர்களுக்காகத்தான் உலகம் படைக்கப்பட்டது’ என்று சொல்லப்படும் கூற்றை மேற்காட்டிய வசனம் பொய்யாக்குவதைக் காணலாம்.

பின்வருமாறு தௌஹீது வகைப்படுத்தப்படும். அவை குர்ஆனிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. “தௌஹீதுர் ரப்பி” (படைப்பதில் ஒருமைப்படுத்தல்) படைப்பவனும் போசிக்கின்றவனும் அல்லாஹ்தான் என்று அறிவதையே “தௌஹீதுர் ரப்பி” குறிக்கும். நிராகரிப்பவர்களில் பலர் இந்த வகையை அறிந்துள்ளனர். இந்த அறிவு அவர்களை இஸ்லாத்தில் பிரவேசிக்கச் செய்யவில்லை. இதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

“அவர்களைப் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின் அல்லாஹ் தான் என்று நிச்சயமாக கூறுவார்கள்” (43:87)

பொது உடமைவாதிகளான நாத்திகர்கள் இறைவன் இருக்கின்றான் என்பதையே மறுக்கின்றனர். இவர்கள் ஜாஹிலிய்யாக் காலத்திலிருந்த காஃபிர்களை விட மோசமானவர்கள்.

“தௌஹீதுல் இலாஹ்” (இரட்சிப்பில் ஒருமைப் படுத்தல்) இது மார்க்கமாக ஆக்கப்பட்ட வணக்க வகைகளில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதாகும். இந்த வகை, துஆக்கேட்டல், உதவிக்கு அழைத்தல், கஃபாவைத் தவாப் செய்தல், அறுத்துப் பலியிடல், நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்களாகும். இந்த வகையைத்தான் காஃபிர்கள் நிராகரிக்கிறார்கள்.

நபி நூஹ் (அலை) அவர்களின் காலம் முதல் முஹம்மத் (ஸல்) அவர்களது காலம் வரை வாழ்ந்த எல்லா நபிமார்களுக்கும் அவர்களுடைய உம்மத்துக்கும் இடையில் இந்த பிணக்கு இருந்து கொண்டே இருந்தது.

அல்குர்ஆன் பல இடங்களில் இந்த அம்சத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றது. “உன்னையே வணங்குகின்றோம்; உன்னிடமே உதவி தேடுகின்றோம்” என்று ஸுரத்துல் பாத்திஹாவில் பிரார்த்தனை புரிவதைக் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே துஆ இறைஞ்சுகின்றோம். ‘வணக்கத்தில் உன்னை மட்டுமே சொந்தமாக்குகின்றோம். உன்னிடம் மட்டுமே பிரார்த்தனை புரிந்து அழைக்கிறோம். உன்னையல்லாத வேறெவரிடமும் உதவி தேட மாட்டோம்’ என்பதே மேற்படி வசனத்தின் அர்த்தமாகும்.

‘தௌஹீதுல் இலாஹ்’ என்பது துஆவிலே அல்லாஹ்வைத் தனிமைப் படுத்துதல், அவனுடைய வேதத்தைக் கொண்டே தீர்ப்பு வழங்குதல், அவனால் ஏற்படுத்தப்பட்ட ஷரீஅத்தையே சட்டமாக அங்கீகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்குவதாகும். பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அவையனைத்தும் அடங்கியுள்ளன.

“நிச்சயமாக நான் தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; என்னையே நீர் வணங்குவீராக” (20:14)

“தௌஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத்” (அல்லாஹ்வுடைய பெயர்களிலும், வர்ணனைகளிலும் ஒருமைப் படுத்தல்) அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய ரஸுலும் எவ்வாறு சொன்னார்களோ, அவ்விதமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அமைப்புக்கள், அர்த்தங்கள் கற்பிக்காமல் உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய ஸிபத்துகளில் ‘இஸ்திவாஉ’ (அமைந்து விடல்) ‘நுஸுல்’ (இறங்குதல்) ‘அல்-யது’ (கை) ‘அல் மஜீஉ’ (வருகை) போன்றவைகளும் அடங்குகின்றன.

உதாரணமாக ‘இஸ்திவாஉ’ என்ற சொல்லுக்கு ‘அல் உலுவ்வு’ (உயர்வு) ‘அல் இர்திபாஉ’ (உயர்தல்) என்பன அல்லாஹ்வுக்குப் பொருந்தக் கூடியனவாக இருப்பதாக தாபிஈன்கள் விளக்கமளித்து உள்ளார்கள் என்று ஸஹீஹுல் புகாரியில் பதிவாகி இருக்கின்றது. பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் செவியுறுவோனாகவும் உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான்” (42:11)

1. அத்தஃவீல்: (அர்த்தம் கொடுத்தல்) ‘தஹ்வீல்’ என்றால், சில குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்குமுள்ள வெளிப்படையான அர்த்தங்களைத் திரித்து பிழையான வேறு அர்த்தம் கற்பிப்பதாகும். உதாரணமாக ‘இஸ்தவா’ (சமமானான்) என்ற சொல்லுக்கு, ‘இஸ்தவுலா’ (ஆட்சி செலுத்தினான்) என்று வேறு அர்த்தம் கற்பிப்பதாகும்.

2. அத்தஃதீல்: (உள்ளதை இல்லையென்று கூறல்) அல்லாஹ்வுடைய ஸிபத்துக்களை மறுத்து அவற்றை இல்லையென்று கூறுவதற்கே அத்தஃதீல் என்று சொல்லப்படும். உதாரணமாக வானத்துக்கு மேல் அல்லாஹ்வின் உயர்வு என்பது போன்றாகும். வழிதவறிய கூட்டத்தினர் அல்லாஹ் எங்கும், எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்று கூறுகின்றனர். “ஆறு நாட்களில் வானம் பூமியைப் படைத்து விட்டுப் பின்னர் அர்ஷின் மீது அமைந்து விட்டான்” (32:4) என்ற குர்ஆனின் கூற்றுக்கு, ‘எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கிறான்’ என்ற பிழையான கூற்று முரண்படுகின்றது.

3. அத்தக்யீப்: (அமைப்பு ஏற்படுத்தல்) அல்லாஹ்வுடைய அமைப்பு இப்படித்தான் என்று கூறி, அவனுடைய ஸிபத்துக்களுக்கு மாதிரி கற்பித்து ஒப்பிடுதலுக்கு ‘அத்தக்யீப்’ என்று சொல்லப்படும். அல்லாஹ் அர்ஷில் அமைந்திருப்பதை அவனுடைய படைப்புக்களுடன் ஒப்பிட முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அவனுடைய அமைப்பை அறிய முடியாது.

4. அத்தம்தீல்: (உதாரணம் கற்பித்தல்) அல்லாஹ்வுடைய ஸிபத்துக்களை அவனுடைய படைப்புக்களுடைய ஸிபத்துக் (அமைப்புக்) களுடன் உதாரணம் கற்பித்து ஒப்பாக்கிக் கூறுவதற்கு ‘அத்தம்தீல்’ எனப்படும். ஸஹீஹ் முஸ்லிமில் ‘அல்லாஹ் முதலாவது வானத்துக்கு இறங்குகிறான்’ என்று கூறப்பட்டுள்ளது. இறங்குகிறான் என்பதை, “நாங்கள் இறங்குவது போன்று இறங்குகிறான்’ என்று உதாரணம் கற்பிக்கக் கூடாது. இறங்குகிறான் என்ற விஷயத்தை மட்டும் சொல்லப்பட்டவாறு உண்மையென அங்கீகரிக்க வேண்டும். இறங்குவதற்கு வேறு அர்த்தமுண்டு என்று சொல்லுதல் வழிகேடாகும்.

‘நாங்கள் இறங்குவது போலவே அல்லாஹ் இறங்குகிறான்’ என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் ஒப்பீடு செய்து காட்டியதாக பொய்யான கதையொன்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. அவருடைய நூல்கள் எதிலும் இப்படியான ஒன்றை நாங்கள் கண்டதில்லை. ஆனால் அதற்கு மாறாக, ‘தம்தீல்’ (உதாரணம் கற்பித்தல்) ‘தஷ்பீஹ்’ (ஒப்பாக்குதல்) போன்றவற்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தக் கூடாது என்று அவர் தனது நூல்களில் கூறியுள்ளதைக் கண்டு கொள்ளலாம்.

5. அத்தப்வீழ்: (பரம்சாட்டுதல்) அல்லாஹ்வுடைய ஸிபத்துக்களைப் பொறுத்தமட்டில் அவை எப்படி என்பதை எவராலும் விபரிக்க முடியாது. இப்படியான இடத்தில் இதன் அமைப்பு முறையை எவரும் அறிய முயற்சிக்கக் கூடாது. அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறியிருப்பதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு, அதற்கு மேற்பட்ட விளக்கத்தை அவனிடம் சாட்டி விடுதல். இதனையே ‘அத்தப்வீழ்’ என்று சொல்லப்படும். அமைப்பு முறையிம் மட்டும் தான் இது இடம்பெறும். சொற்களுக்கு அர்த்தம் சொல்வதில் இந்தத் ‘தப்வீழ்’ இடம்பெறாது. உதாரணத்துக்கு ‘அல்இஸ்திவாஉ’ என்ற சொல்லுக்கு ‘அல்உலுவ்வு’ (உயர்தல்) என்று கருதப்படும். ஆனால் இதன் அமைப்பு என்ன? என்பது பற்றி அல்லாஹ் மட்டுமே அறிவான். ‘தப்வீழ்’ பற்றி இங்கு கூறப்பட்ட விளக்கமனைத்தும் ஸலபுஸ்ஸாலிஹீன்களுடையதாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.