உதவிபெற்ற கூட்டம் எது?

1. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: ‘என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உண்மைக்காகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வுடைய கட்டளை எனும் மௌத்து அவர்களுக்கு வரும்வரை, அவர்களை எதிர்ப்பவர்களால் எந்தவிதத் தீங்கையும் அவர்களுக்குச் செய்து விட முடியாது’ ஆதாரம்: முஸ்லிம்.

2. ‘ஸிரியா வாசிகள் (பண்புகளால்) கெட்டு விடுவதால் உங்களுக்கு எந்தவித நன்மையுமில்லை. அல்லாஹ்வின் உதவிபெற்ற ஒரு கூட்டம் எனது உம்மத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள். மறுமை ஏற்படும்வரை, அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படமாட்டாது’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

3. உதவிபெற்ற அக்கூட்டம் ‘அஸ்ஹாபுல் ஹதீஸ்’ (ஹதீஸையுடையவர்கள்) என்பதாக இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அவ்விதமே அலிய்யுப்னுல் மதீனி (ரஹ்) அவர்கள் சொன்னதாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

4. உதவிபெற்ற அந்தக் கூட்டம் அஸ்ஹாபுல் ஹதீஸாக இல்லையென்றால், அவர்களை யாரென நானறியேன் என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5. நிச்சயமாக அஹ்லுல் ஹதீஸ் என்போர் ஸுன்னாவின் அடிப்படையிலுள்ள சட்டங்களைப் பின்பற்றுகின்றவர்கள். மனிதர்களிலேயே மிகவும் அறிவாளிகளாக இருப்பவர்கள். நபியவர்களின் நடைமுறைகளையும், அவர்களுடைய நற்குணங்களையும், அவற்றுடன் தொடர்புடைய ஏனைய அம்சங்களையும் அதிகம் அறிந்தவர்களாக இருப்பார்கள்.

6. இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இமாம் இஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்: ‘நீங்கள் என்னைவிட அதிகமாக ஹதீஸ்களை அறிந்தவர்களாக இருகின்றீர்கள். உங்களுக்கு ஒருவர் ஸஹீஹான ஹதீஸை அறிவித்தால், அவர் ஹிஜாஸ் வாசியாக இருந்தாலும், கூபாவாசியாக இருந்தாலும், அல்லது பஸராவாசியாக இருந்தாலும் அந்த அறிவிப்பாளரை எனக்கு அறியத் தாருங்கள். நான் அவரிடம் சென்று அந்த ஹதீஸ் பற்றி வினவுவேன்’ என்று இமாமவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் எம்மையும் அஹ்லுல் ஹதீஸ்களுடன் மறுமையில் எழுப்புவானாக! அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர வேறெந்த ஒரு மனிதனுடைய சொல்லிலும் (அது மட்டும் தான் சரி என்று) பிடிவாதமாக இருக்க மாட்டார்கள். அந்த மனிதன் மக்களுடைய கண்ணோட்டத்தில், அந்தஸ்தில் எவ்வளவு உயர்ந்திருப்பினும் சரி.

அஹ்லுல் ஹதீஸ் நபி (ஸல்) அவர்களுடைய சொல்லில் பிடிவாதமாக இருப்பது போலவே இவர்களுக்கு எதிரானவர் (மத்ஹப்வாதி) கள் தத்தமது இமாம்களுடைய சொல்லில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். அஹ்லுல் ஹதீஸ் தான் வெறிபெற்ற கூட்டமாகவும், உதவிபெற்ற கூட்டமாகவும் இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

7. அல்கதீபுல் பஃதாதிய்யி (ரஹ்) அவர்கள் தனது ‘ஷரபு அஹ்லில் ஹதீஸ்’ (அஹ்லுல் ஹதீஸின் சிறப்பு) என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

சொந்தக் கருத்தைக் கொண்டு செயல்படுபவனுக்கு அவனுடைய அறிவில் பயனுண்டு என்றிருந்தால், இதல்லாத நபி (ஸல்) அவர்களின் நடைமுறை அவனுக்குத் தேவைப்பட மாட்டாது. ஏனென்றால் ஹதீஸ் என்பதோ, எல்லா அம்சங்களையும் உள்ளடக்குகின்றது.

தௌஹீதின் அடிப்படை அறிவுகளையும், மறுமை பற்றியும், தண்டனைகள் சம்பந்தமான எச்சரிக்கைகள் பற்றியும், அல்லாஹ்வுடைய ஸிபத்து (இறைமையின் சிறப்பியல்பு) கள் பற்றியும், சுவர்க்கம் நரகம் பற்றிய செய்திகள் அங்கு நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்திருப்பவை ஆகியவை பற்றித் தகவல்களை ஹதீஸ் தருகின்றது.

மேலும் ஹதீஸிலே நபிமார்களின் சரித்திரங்கள், நல்லடியார்கள் ஸாலிஹீன்களுடைய செய்திகள், நபி (ஸல்) அவர்களுடைய உபதேசங்கள், அற்புத நிகழ்ச்சிகள் போன்றவை அடங்குகின்றன. குர்ஆனுக்கு வியாக்கியானம், அதிலுள்ள ஞானம், நல்லுபதேசம், ஸஹாபாக்களால் பாதுகாக்கப்பட்ட சட்டங்கள் போன்றவையும் அதில் அடங்குகின்றன.

அல்லாஹ், அஹ்லுல் ஹதீஸை ஷரீஅத்தின் தூண்களாக அமைத்துள்ளான். அவர்கள் மூலம் பித்அத்துகளைத் தகர்த்தெறிகிறான். அவர்கள் அல்லாஹ்வுடைய படைப்புகளில் நம்பிக்கையானவர்கள். (மார்க்க போதனையின் மூலம்) நபியவர்களுக்கும் உம்மத்துக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்துகின்றவர்கள். ஹதீஸின் மூலத்தை (சிதைவு ஏற்படாமல்) பாதுகாக்கின்றவர்கள். அவர்களுடைய ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய சிறப்பு இருந்து கொண்டே இருக்கின்றது.

அஸ்ஹாபுல் ஹதீஸைத் தவிர, ஏனைய ஒவ்வொரு கூட்டமும் தமது மனோ இச்சையில் நிலையாக இருந்துக் கொண்டு அதனை ஒரு நல்ல செயலாகவும் எடுத்துக் கொள்கின்றது. அஸ்ஹாபுல் ஹதீஸுக்கு அல்குர்ஆன் தான் சேமிப்பு; அஸ்ஸுன்னா அத்தாட்சி; நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களுமே அவர்களது கூட்டம்; அவர்கள் பக்கமே இவர்களது தொடர்புண்டு. இவர்கள் எப்பொழுதும் தமது சொந்த அபிப்பிராயத்தின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். இவர்களுக்கு எவன் தொல்லை ஏற்படுத்துகின்றானோ, அவனை அல்லாஹ் தண்டித்து விடுவான். இவர்களுடன் எவன் பகைத்துக் கொள்கின்றானோ, அவனை அல்லாஹ் இழிவு படுத்துவான். இதுவரை கூறப்பட்டவை அனைத்தும் அஸ்ஹாபுல் ஹதீஸ் பற்றி அல்கதீபுல் பஃதாதிய்யி (ரஹ்) அவர்கள் கூறிய கருத்துக்களாகும்.

அல்லாஹ் நம்மனைவரையும் அஹ்லுல் ஹதீஸ்களுடன் சேர்த்தருள்வானாக! அதன்படி செயல்படக் கூடியவர்களாகவும் அவர்களுடன் நட்புக் கொள்ளக் கூடியவர்களாகவும், அவர்களுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகின்றவர்களாகவும் நம்மனைவரையும் ஆக்குவானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.