1. “(மூமின்களே!) அல்லாஹ்வுடைய கயிற்றை (குர்ஆனை) நீங்கள் பலமாகப் பற்றி பிடியுங்கள். (உங்களுக்குள்) பிரிந்து விடாதீர்கள்” (3:103) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
2. “இணைவைத்து வணங்குவோ (ஷிர்க் வைப்போ) ரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்களுடைய மார்க்கத்தில் பிரிவினையை உண்டுபண்ணிப் பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனர். அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) தைக் கொண்டு சந்தோசப்படுகின்றனர்” (30:31,32) என்று மூமின்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்.
3. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: ‘அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும், உங்களிடமுள்ள தலைவருடைய கட்டளைகளுக்குச் செவிதாழ்த்திக் கீழ்படியுமாறும் நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். அந்தத் தலைவர் அபிசீனியாவைச் சேர்ந்த ஒர் அடிமையாக இருப்பினும் சரியே. எனக்குப் பின் எவர் வாழ்வாரோ அவர் அதிகமான கருத்து முரண்பாடுகளைக் காண்பார். அப்பொழுது நீங்கள் எனது ஸுன்னத்தை (நடைமுறையை) யும், குலபாஉர் ராஷிதீன் (நேர்வழி நடக்கும் கலீபாக்) களுடைய ஸுன்னத்தையும் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாகும். அதனை கடைவாய்ப் பற்களினால் கௌவிப் பிடியுங்கள். (மார்க்கத்தில்) புதிதாகத் தோன்றுவனற்றில் மிக எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் புதிதானவை அனைத்தும் பித்அத்துகளாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடாகும்’
ஆதாரம்: திர்மிதி. இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்பதாக திர்மிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆதாரமற்றவை அனைத்தும் சந்தேகத்துக்கு உரியனவாகும். கருத்துவேற்றுமை ஏற்படுமிடத்தில், ஆதாரமுள்ளதை எடுத்துக் கொண்டு சந்தேகமானதை விட்டுவிடுமாறு மேற்படி ஹதீஸ் வலியுறுத்துகின்றது. அத்துடன் மார்க்கமென்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட புதிதான செயல் முறைகள் அனைத்தும் வழிகேடு என்பதாக மேற்படி ஹதீஸ் கூறுகின்றது. ஆதாரமற்ற ஒரு செயல் பயபக்தி ஏற்படுவது போல் உருவமைத்துக் காட்டப்பட்டாலும், இடையில் புகுத்தப்பட்டது என்ற காரணத்தால், அது வழிகேடு என்பதில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை — (மொழிபெயர்ப்பாளர்)
4. ‘அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னிருந்த யூத, கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள். எனது உம்மத்து 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். 72 கூட்டங்கள் நரகில் (பிரவேசிப்பார்கள்) ஒரு கூட்டத்தினர் மட்டுமே சுவர்க்கத்தில் (பிரவேசிப்பார்கள்). அந்தக் கூட்டம்தான் (ஸுன்னத் வல்) ஜமாஅத்தாகும்’ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்
வேறு சிலரின் மற்றொரு ரிவாயத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘ (ஒரே) ஒரு கூட்டத்தைத் தவிர அவர்கள் அனைவரும் நரகம் பிரவேசிப்பார்கள். நானும் எனது ஸஹாபாக்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ, அவ்வழியில் இருப்பவர்கள் தான் அந்த ஒரு கூட்டமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. ஆதாரம்: திர்மிதி, (ஸஹீஹ்)
(சுவர்க்கம் பிரவேசிப்பது ஒரு கூட்டம் மட்டுமே என்றும் ஏனைய 72 கூட்டங்களும் நரகமே பிரவேசிப்பார்கள் என்றும் மேற்காட்டிய ஹதீஸ் கூறிற்று. இந்த ஹதீஸ் வேறு சில கிரந்தங்களில் சற்று விரிவாகக் காணப்படுகின்றது. சுவர்க்கம் செல்லும் கூட்டத்தின் அடையாளமாவது, நபி (ஸல்) அவர்களையும், ஸஹாபாக்களையும் மட்டுமே பின்பற்றுவார்கள். எவர்கள் தமது மார்க்க விஷயங்களில் எல்லா நிலைகளிலும் நபியவர்களையும், ஸஹாபாக்களையும் பின்பற்றுகின்றவர்களாக இருக்கின்றனரோ, அவர்கள் தான் சுவர்க்கம் செல்லும் 73வது கூட்டத்தினராவர்). (மொழிபெயர்ப்பாளர்)
5. ‘ஒரு தினம் நபி (ஸல்) அவர்கள் தனது கையினால் நேரான ஒரு கோடு கீறினார்கள். பின்பு ‘இதுதான் நேரான அல்லாஹ்வின் பாதையாகும்’ என்று கூறினார்கள். அக்கோட்டிலிருந்து அதன் வலமும் இடமுமாக பல கோடுகளைக் குறுக்காகக் கீறிவிட்டு, இவையனைத்தும் பல வழிகள்; இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஷைத்தான் இருந்து கொண்டிருக்கிறான். அவற்றில் அந்த ஷைத்தான்கள் ஒவ்வொன்றும் இருந்து கொண்டு, அதனதன் வழியின் பால் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிவிட்டுப் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.
(அல்லாஹ் கூறுகிறான்:) “நிச்சயமாக இதுதான் எனது நேரான வழி. நீங்கள் அனைவரும் இதனையே பின்பற்றுங்கள். (நேரான ஒரு தனி வழிக்குமாறான) பலவழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அவனு (அல்லாஹ்வு) டைய பாதையை விட்டும், உங்களைத் திருப்பிப் பல பிரிவுகளாகப் பிரித்து விடும். நீங்கள் அனைவரும் உள்ளச்சம் உடையவர்களாக ஆகுவதற்காக இதனைக்கொண்டே அல்லாஹ் உங்களுக்கு வஸிய்யத் செய்து (நற்புத்தி) கூறுகிறான்” (6:153) அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) ஆதாரம்:அஹ்மத், நஸஈ, ஹாகிம்
6. நாம் அனைவரும் ஒன்றுபட்டு சங்கையான குர்ஆனைப் பற்றிப் பிடிக்குமாறும், தமது மார்க்கத்தில் பல பிரிவினர்களாகப் பிரிந்த இணைவைப்பவர்களில் நாம் ஆகிவிடாதிருக்குமாறும் மேற்காட்டிய வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் பல பிரிவுகளாகப் பிரிந்தனரென்றும், முஸ்லிம்கள் அதனைவிட அதிகமாகப் பிரிவார்களென்றும், இவர்களில் ஒரு கூட்டத்தைத் தவிர ஏனையவர்கள் குர்ஆனை விட்டும், நபியவர்களது ஸுன்னாவை விட்டும் தூரப்படுவதனால் நரகம் பிரவேசிப்பதற்குக் காரணமாக அமைகிறது என்றும் நபி (ஸல்) அவர்கள் எமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
அப்பிரிவுகளிலிருந்து வெற்றிபெற்றோர் ஒரேயொரு கூட்டத்தினர் மட்டுமே ஆவார்கள். இக்கூட்டம் மட்டுமே சுவர்க்கம் பிரவேசிக்கும். இவர்கள் குர்ஆனையும், ஸுன்னாவையும், நபித்தோழர்களின் நடைமுறையையும் உறுதியாகப் பற்றிப் பிடித்தவர்கள் ஆவார்கள்.
7. வெற்றிபெற்ற கூட்டம் என்றால், அவர்கள் தான் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் ஆவார்கள். அஹ்லுஸ்ஸுன்னா (ஸுன்னா உடையோர்) என்ற இக்கூட்டத்துக்கு அஹ்லுல் ஹதீஸ் (ஹதீஸ் உடையோர்) என்ற மற்றொரு பெயரைத் தவிர வேறெந்தப் பெயரையும் கூறுவதற்கில்லை என்று முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிய்யி (ரஹ்) அவர்கள் தனது ‘அல்குன்யா’ என்ற நூலில் கூறியுள்ளார்கள்.