1356. நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ‘அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்க மாட்டார்கள்’ என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ‘முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்பதாகும். நபி (ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது” என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
புஹாரி : 65 அனஸ் (ரலி)
1357. ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை கண்டேன். பிறகு மக்கள், (அதைப்போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து) கொண்டார்கள்.எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தம் (தங்க) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டனர்.
புஹாரி :5868 அனஸ் (ரலி).