தமிழாக்கியோன் உரை

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும், ஸலாமும் அவனது ரஸூல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ அவர்களது ‘அல்-பிர்கதுந் நாஜியா’ (Al-FIRKATHUN NAJIYA) என்ற அரபி நூலை வாசிக்கும் அரிய வாய்ப்பொன்று கிட்டியது. அல்-ஹம்துலில்லாஹ்!

அவர் தனது நூலை 54 சிறு தலையங்கங்கள் கொண்டதாக அமைத்திருப்பது, வாசிப்போருக்கு விருவிருப்பையும் உற்சாகத்தையும் ஊட்டுவதாக அமைந்துள்ளது. ஈமானை வலிறுத்துவதாகவும், சமூகத்தில் மலிந்துள்ள ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கைகள் போன்றவற்றைத் தடை செய்வதாகவும் அவை அமைந்துள்ளன.

அவர் ஒவ்வொரு அம்சத்துக்கும் குர்ஆனையும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டியுள்ளார். ஹதீஸைப் பொறுத்தமட்டில் அதன் ஆதாரக் கிரந்தங்களைக் காட்டும் போது, புகாரி, முஸ்லிமல்லாத ஏனைய கிரந்தங்களின் ஆதாரங்களுக்குப் பின்னால் ‘ஸஹீஹ்’ (சரியானது) ‘ஹஸன்’ (நல்லது) என்ற வார்த்தையைக் குறித்துக் காட்டுகின்றார்.

ஏனென்றால் அக்கிரந்தங்களில் ஸஹீஹ் அல்லாதவைகளும் உண்டு. அதனால் அவற்றிலுள்ள ஸஹீஹ்களை மட்டுமே தனது நூலுக்கு ஆதாரமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் புகாரி, முஸ்லிமைப் பொறுத்தமட்டில் அவற்றில் ஸஹீஹானவைகள் மட்டுமே இருப்பதால் ஸஹீஹ் என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல் வெறுமனே ‘புகாரி, முஸ்லிம்’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இவ்விதமாகவே ஹதீஸ்களின் ஆதாரங்களைத் தனது நூலில் குறிப்பிடுவதாக “ளஈபான’ மவுளூஆன ஹதீஸ்கள் என்ற 49ம் தலையங்கத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மேற்படி நூலை தமிழில் மொழி பெயர்த்துத் தமிழ் பேசும் மக்களுக்கும் பயன்பெறச் செய்யவேண்டுமென்ற ஆவலைப் பூர்த்திச் செய்யும் வகையில் எனது இம் மொழிபெயர்ப்பைப் பிரசுரம் செய்ய அகில இலங்கை ஜம்இய்யத் அன்ஸார் ஸுன்னத் முஹம்மதிய்யா முன் வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இவ்வியக்கம் இஸ்லாம் மார்க்கத்துக்காகச் செய்யும் இப்பணியையும், இதல்லாத ஏனைய பணிகளையும் அல்லாஹ் அங்கீகரித்து அருள் புரிவானாக! ஆமீன்!

அப்துல் வதூத் முஹம்மத் ஸாலிஹ்
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.