961. (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப்பெற்றன: 1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார். 2. ‘அடிமையின் வாரிசுரிமை (‘வலா”) விடுதலை செய்தவருக்கே உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் ‘ஆம்! (இருக்கிறது) ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?’ என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு” என்றார்கள்.
962. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முன்னாள்) அடிமைக்கு வாரிசாகும் உரிமையை (அவனுடைய எஜமானர்கள்) விற்பதையும் (அன்பளிப்பாக) வழங்குவதையும் தடை செய்தார்கள்.
963. அலீ (ரலி) அவர்கள் சுட்ட செங்கற்களாலான ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்க விடப்பட்டிருந்தது. அவர்கள் (தம் உரையில்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகிற நூல் எதுவும் எங்களிடம் இல்லை” என்று கூறிவிட்டு, அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாகத் தரப்பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன. மேலும், அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது; மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலாக வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும் (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்). அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான். தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்.