908. ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் (ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது” என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ் (ரலி), தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள், ‘அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?’ என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள்.
909. ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். எனவே, அவள் இன்னொருவரை மணந்துகொண்டாள். அவரும் தலாக் சொல்லிவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) ‘முந்திய கணவருக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவளா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை முந்தைய கணவர் (தாம்பத்திய) இன்பம் அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாம் கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்கும் வரையில் முடியாது” என்று கூறிவிட்டார்கள்.