841. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருக்கவில்லை என்றால் கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷிகள் அதை (அடித்தளத்தை விட)ச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள்.
842. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! நிச்சயமாக உன்னுடைய கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தின்படி நீங்கள் அதை மாற்றலாமல்லவா?’ எனக் கேட்டேன். ‘உன்னுடைய கூட்டத்தினர் இப்போதே இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இல்லையெனில் அவ்வாறே நான் செய்திருப்பேன்’ என்றார்கள். ”ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதிக்கு எதிரே உள்ள இரண்டு மூலைகளில் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம் இறை இல்லமான ‘கஅபா’வானது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம்விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதேயாகும் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறினார்.