838. நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உஸாமா இப்னு ஸைத் (ரலி) உஸ்மான்பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்த பிலால் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். ‘ஒரு தூண் தம் வலப்பக்கமும் மற்றொரு தூண் தம் இடப்பக்கமும் மூன்று தூண்கள் பின்புறமும் இருக்குமாறு தொழுதார்கள்’ என்று பிலால்(ரலி) விடையளித்தார்கள். அன்றைய தினம் கஅபாவுக்குள் ஆறு தூண்கள் இருந்தன. மற்றோர் அறிவிப்பில் ‘வலப்பக்கம் இரண்டு தூண்கள்’ என்று கூறப்படுகிறது.
839. ‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே நுழைந்ததும் அதன் எல்லா ஓரங்களிலும் நின்று பிரார்த்தித்தார்கள். அதிலிருந்து வெளியாகும்வரை அவர்கள் தொழவில்லை. வெளியே வந்தபின்பு கஅபாவின் முன்பாக நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ‘இதுதான் கிப்லா’ என்று கூறினார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
840. நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது வலம் வந்துவிட்டு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிடமிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் ‘நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா?’ என ஒருவர் கேட்டதற்கு அவர் இல்லை!” என பதிலளித்தார்.