824. நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8-ஆம் நாள் லுஹர், அஸ்ர் தொழுகைகளை எங்கு தொழுதார்கள் என்பதைப் பற்றித் தாங்கள் அறிந்ததை எனக்குத் தெரிவியுங்களேன் எனக் கேட்டேன். அதற்கவர் ‘மினாவில்’ என்றார். பிறகு நான், (ஹஜ் முடித்து மினாவிலிருந்து) திரும்பும்போது எங்கு அஸர் தொழுதார்கள் எனக் கேட்டதும் ‘அப்தஹ்’ எனுமிடத்தில் என்று கூறிவிட்டு, ‘உம்முடைய தலைவர்கள் செய்வது போன்றே செய்வீராக!’ என்றும் கூறினார்.
825. ”(முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல) பயணம் எளிதாவதற்காக நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே முஹஸ்ஸப் ஆகும்!”.
826. ”முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல. அது நபி (ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம் அவ்வளவுதான்!”.
827. நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும் பொழுது, ‘நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் ‘குப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்’ என்று சத்தியம் செய்த இடம்” என்றார்கள்.”பனூ ஹஷிமுக்கும் பனூ முத்தலிபுக்கம் எதிராக நபி (ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்யமாட்டோம்’ என குறைஷிக் குலத்தாரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கிறது” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
828. அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி). (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் வினியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக் கொள்ள, நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.