812. நாங்கள் முஸ்தலிஃபாவில் தங்கினோம். அப்போது ஸவ்தா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், மக்கள் புறப்படுவதற்கு முன்பாக, தாம் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட அனுமதி கேட்டார். ஏனெனில், அவர் மெதுவாக நடக்கக் கூடியவராக இருந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். அவ்வாறே, மக்கள் அங்கிருந்து புறப்படும் முன் அவர் புறப்பட்டுவிட்டார். நாங்கள் மட்டும் ஸுப்ஹு வரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நாங்களும் புறப்பட்டோம். ஸவ்தா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்றது போன்று நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும் விட அது எனக்கு அதிகப் பிரியமானதாக இருந்திருக்கும்.
813. அஸ்மா (ரலி) முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, ‘மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘இல்லை!” என்றதும், சிறிது நேரம் தொழுதார்கள். பிறகு ‘சந்திரன் மறைந்துவிட்டதா?’ எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றதும் ‘புறப்படுங்கள்!’ எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தம் கூடாரத்தில் ஸுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், ‘அம்மா! நாம் விடியம் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகிறதே!” என்றேன். அதற்கவர்கள், ‘மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதி வழங்கியுள்ளார்கள்” என்றார்கள்.
814. நபி (ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன்.
815. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) தம் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (மினாவிற்கு) அனுப்பி விடுவார். மற்றவர்கள் முஸ்தலிஃபாவில் மஷ்அருல் ஹராம் என்னுமிடத்தில் இரவு தங்குவார்கள். அங்கு விரும்பியவாறு அல்லாஹ்வை நினைவு கூர்வர். பிறகு இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்னமேயே இவர்கள் (மினாவுக்குத்) திரும்பி விடுவார்கள். அவர்களில் சிலர் ஃபஜ்ருத் தொழுகைக்கு மினாவை அடைவர். இன்னும் சிலர் அதற்குப் பின்னால் வந்தடைவர். அவர்கள் அங்கு வந்ததும் ஜம்ராவில் கல்லெறிவர். பலவீனர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள்