777. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துலஹஜ் மாதம் நான்காம் நாள் காலையில் ஹஜ்ஜிற்கு இஹ்ராம் கட்டியவர்களாக வந்து சேர்ந்தனர். பலியிடப்படும் பிராணியைக் கொண்டு வந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
778. நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார். பிறகு ஒருநாள் ஒருவர் என் கனவில் தோன்றி, ‘ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உம்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது’ எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறியபோது (‘தமத்துஉவே) நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறி, ‘நீ என்னுடன் தங்கிக் கொள். என்னுடைய செல்வத்திலிருந்து ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்’ எனக் கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நஸ்ர் இப்னு இம்ரானிடம் கேட்டேன். ‘நான் கண்ட கனவே காரணம்’ என அவர் கூறினார் என்று ஷுஃபா கூறுகிறார்.