645. மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு ‘முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?’ எனக் கேட்டார்கள்.
646. நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகிறேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கிறேன். அதற்குள் அது சதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகிறது உடனே அதைப் போட்டு விடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
647. நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘இது ஸதக்காப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்றார்கள்.