612.நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது” என்றும் கூறினார்கள்.
613.”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
614.நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” எனக் கூறினார்கள்.அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன். அபூ பக்ர் (ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்.