561.”ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
562.”உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும்வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும்.”
563.”நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
564.ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா” என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்” எனக் கூறினார்கள்.
565.ஸஹ்ல் இப்னு ஹுனைஃபு (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள். அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.