28:76. நிச்சயமாக காரூன் மூஸாவின் (மோசே) சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். எனினும்: அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்;அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன;அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; “நீ (இதனால் பெருமைக் கொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான்” என்று கூறினார்கள்.
28:77. “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை (மறு உலக) வீட்டைத் தேடிக்கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே: நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்)
28:78. (அதற்கு அவன்) கூறினான்: ” எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப் பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமை உடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டர்கள்.
28:79. அப்பால், அவன் (கர்வத்துடனும் உலக) அலங்காரத்துடனும் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; “ஆ! காரூனுக்கு கொடுக்கப் பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக் கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்றும் கூறினார்கள்.
28:80. கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் (நம்பிக்கை) கொண்டு, நல்ல அமல்கள் செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
28:81. ஆகவே, காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கின்ற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
28:82. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சர்யம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகின்றான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை (அருள்) செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்த செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் (நிராகரிப்போர்) சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.