540. (மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா (ரலி) ஜஅஃபர் (ரலி) இப்னு ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, ‘அவர்கள் (என்னுடைய சொல்லிற்குக்) கட்டுப்படவில்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘(நீ சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்து’ எனக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று மூன்றாம் முறையாக வந்து ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிகைத்துவிட்டனர்” என்றார். ”அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, ‘அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை” எனக் கூறினேன்.
541.ஒப்பாரி வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்ததை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறு யாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு ஸுலைம் (ரலி) உம்முல் அலா (ரலி), முஆத் (ரலி) அவர்களின் மனைவியான அபூ சப்ராவின் மகள் இன்னும் இரண்டு பெண்கள் அல்லது அபூ ஸப்ராவின் மகள் முஆத் (ரலி) உடைய மனைவி. இன்னும் ஒரு பெண்,
542.நாங்கள் (மகளிர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்கமாட்டார்கள்” எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரி வைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தம் கையை பின்வாங்கினார். மேலும், அவர் ‘இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரி வைத்து) விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.