404– குளிரும் காற்றும் நிறைந்த ஒரு இரவில் தொழுகைக்காக இப்னு உமர் (ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்றார்கள். குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள் எனவும் கூறினார்கள்.
405– பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்த போது என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி (ஸல்) அவ)ர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறி விட்டு நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான். எனினும் நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்கள்.