392– நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள். இறைவா! வலீத் பின் அல்வலீத், ஸலாமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ மற்றும் மூமின்களில் பலவீனர்களை நீ காப்பற்றுவாயாக! இறைவா! முள்ர் கூட்டத்தின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! யூஸுஃப் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட (பஞ்சமான ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும்) பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (மதீனாவுக்கு) மேல்த் திசையில் வாழ்ந்த முள்ர் கூட்டத்தினர் அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர்.
புஹாரி-804: அபூஹுரைரா (ரலி)
393– ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஒதினார்கள்.
394– ஆஸிம் (ரஹ்) அறிவித்தார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘குனூத்’ ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)” என்று கூறினார்கள். ‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)’ என்று நீங்கள் கூறியதாக இன்னார் நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அவர் பொய் சொன்னார்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி (ஸல்) அவர்களைக் குறித்து, ‘அவர்கள் பனூசுலைம் குலத்தாரின் சில கிளையினருக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்” என்று அறிவித்தார்கள். அப்போது அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைக்கும் மக்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள்… என்று (அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்… அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். பனூசுலைம் குலத்தாருக்கு நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. எனவே, அவர்களின் மீது கோபமடைந்ததைப் போல் வேறெவர் மீதும் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து நான் பார்த்ததில்லை.
395-நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு ‘குர்ரா’ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கவலைப்பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், ‘உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்” என்றும் சொன்னார்கள்.