இமாம் சுருக்கமாகவும் முறையாகவும் தொழுவித்தல்..

267.ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் அதிகாலை (க்கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்து விடுகிறேன். என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதை விடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள் மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். ஆகவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில் மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர் என்று சொன்னார்கள்.

புகாரி-7159: அபூமஸ்ஊத் அல் அன்சாரி (ரலி)


268– மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும்! ஏனெனில் பலவீனர்கள், நோயாளிகள், முதியவர்கள் அவர்களில் உள்ளனர். தனித்துத் தொழும்போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-703: அபூஹுரைரா (ரலி)

269– நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்.

புஹாரி-706: அனஸ் (ரலி)

270– நபி (ஸல்) அவர்களை விடத் தொழுகையைச் சுருக்கமாகவும் (அதேசமயம்) பூரணமாகவும் தொழுவிக்கக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஓரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.

புஹாரி-708: அனஸ் பின் மாலிக் (ரலி)


271– நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-709: அனஸ் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.