262– எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் போது லுஹர் தொழுபவாகளாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிருடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். இந்த ஹதீஸை அபூபர்ஸாவிடமிருந்து அறிவிக்கும் அபுல் மின்ஹால், மஃரிப் பற்றி அபூபர்ஸா (ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் வரை அல்லது இரவின் பாதிவரை தாமதப் படுத்துவது பற்றிப் பொருட்படுத்த மாட்டார்கள் என அபூபர்ஸா (ரலி) குறிப்பிட்டார்கள் என்கிறார்.
263– நான் வல்முர்ஸலாதி உர்பன் என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனை செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு (ரலி) அருமை மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! மஃரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஒதியதன் மூலம் எனக்கு நினைவு படுத்தி விட்டாய் என்று கூறினார்கள்.
264– நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் தூர் அத்தியாயத்தை ஓதும்போது நான் செவியுற்றுள்ளேன்.