நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்..

227- என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில் தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு (தஷஹ்ஹூதில்) கற்றுக் கொடுத்திருக்கின்றான். என்று கேட்டோம். அதற்கு அவர்கள் இறைவா! இப்ராஹீம் அவர்கள் மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்கள் மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.

புகாரி- 3370: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்)

228- மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது நாங்கள் எப்படி ஸலவாத்து சொல்வது? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் இறைவா! இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்கள் மீதும் அவர்களுடைய மனைவிமார்கள் மற்றும் அவர்களுடைய சந்ததிகள் மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களுடைய மனைவிமார்கள் மீதும் அவர்களுடைய சந்ததிகள் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம் நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.

புகாரி- 3369: அபூ ஹூமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.