196- நபி (ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நாம் உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்? என்றார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நீர் (மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எடுத்து விடுவீரானால், அல்லது இந்திரியம் வெளியாகாமலிருந்தால், அதற்காக நீர் உளூ செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இச்சட்டம் பின் மாற்றப்பட்டது)
197- நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவர் மீது குளிப்புக் கடமையாகுமா? என்று கேட்டேன். அதற்கு மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவவேண்டும், பின்னர் உளூ செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். குளிப்பது தான் சிறந்தது. ஆனால் இந்த ஹதீஸ் கடைசி கட்டளையாக இருந்தது.
198- ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உதுமான் (ரலி)இடம் கேட்டேன். அதற்கு அவர் தமது ஆண்குறியைக் கழுவி விட்டுத் தொழுகைக்கு செய்வது போன்று உளூ செய்ய வேண்டும். இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என உதுமான் (ரலி) கூறினார்கள்.