தொழும் திசை குறித்த இறை கட்டளைகள்.

2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை (தொழும் திசையை) விட்டுத் திருப்பி விட்டது எது?” (நபியே!) நீர் கூறும்: “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.



2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியதும்) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின் திரும்பிச் செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பாராமுகமாக இல்லை.

2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டு வந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவை பின்பற்ற மாட்டார்கள்; நீரும் அவர்கள் கிப்லாவை பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்கு கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.

2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

2:148. ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கமே திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கின்றான்.

2:149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை – அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை.

2:150. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனித பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்துகளை (அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).

2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்தே ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.

2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

அல் குர்ஆன்:- அல் பகரா (பசு மாடு)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.