கேள்வி கணக்கு கேட்பவன்.

13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தி இருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.

13:39. (எனினும்) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.

13:40. (நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ்நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும் படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப்பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்) உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.

13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

13:42. (நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வொரு ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

13:43. (நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேத ஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று கூறி விடுவீராக!

அல் குர்ஆன்:- அர் ரஃது (இடியோசை)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.