வெறும் வார்த்தைகள்.

33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், (நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும்) முனாஃபிக்களுக்கும் (நயவஞ்சகர்களுக்கும்) கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.

33:2. இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை – உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவிகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய(பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹூ, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.

33:8. எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையைப் பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.

அல் குர்ஆன்: அல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.