6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா (மோஸே) கொண்டு வந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கி வைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான(தர்க்கத்)தில் விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
6:92. இந்த வேதத்தை (குர்ஆனை) அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்கு முன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனை சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்) எவர்கள் மறுமையை (இறுதி தீர்ப்பு நாளை) நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களைவிடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் (வானவர்கள்) தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ” உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).
6:94. அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி) “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறி விட்டன” (என்று கூறுவான்).
அல் குர்ஆன்: அல் அன்ஆம் (கால்நடைகள்)