ஆட்சி அதிகாரத்தை கேட்டுப் பெறாதே.

1197. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து” என்றார்கள்.

புஹாரி : 6622 அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா (ரலி).

1198. நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அபூ மூஸாவே’ அல்லது ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!’ என்றார்கள். நான், ‘சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி ‘கொடுப்பதில்லை’ அல்லது ‘ஒருபோதும் கொடுக்க மாட்டோம்’. எனவே, ‘அபூ மூஸாவே’ அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே’ நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்” என்றார்கள். (அவ்வாறே அபூ மூஸா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா (ரலி) அவர்கள் எடுத்து வைத்து ‘வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்றார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, ‘இவர் யார்?’ என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் ‘இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தைவிட்டுவெளியேறி) யூதராகிவிட்டார்” என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) ‘அமருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)” என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா (ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வணங்குவது குறித்து பேசிக்கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் (முஆத் (ரலி) அவர்கள்) ‘நான் இரவில் சிறிது நேரம்) நின்று வணங்குகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். நின்று வணங்குவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.

புஹாரி : 6923 அபூபுர்தா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஆட்சி அதிகாரத்தை கேட்டுப் பெறாதே.

தனக்குப் பின் தலைமைத்துவத்துக்கு பிறரை நியமித்தல் பற்றி..

1196. உமர் (ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) ‘நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள்” என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர் (ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை” என்று கூறினார்கள்.

புஹாரி :7218 இப்னு உமர் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தனக்குப் பின் தலைமைத்துவத்துக்கு பிறரை நியமித்தல் பற்றி..

முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் குர்ஆனை நம்புங்கள்!

2:176. நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.

4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, ‘நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!’ என்று கூறி, ‘ராயினா’ என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் ‘நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிபட்டோம்;’ (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும் மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும் – ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் குர்ஆனை நம்புங்கள்!

ஆட்சியதிகாரத்தில் குறைஷியருக்கு முன்னுரிமை.

1193. மக்கள் அனைவரும் இந்த (அட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லீமாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்லீமாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3495 அபூஹுரைரா (ரலி).

1194. இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3501 இப்னு உமர் (ரலி)

1195. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், ‘பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்” என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், ‘அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று (நபி (ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

புஹாரி :7222 ஜாபிர் பின் ஸமுரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on ஆட்சியதிகாரத்தில் குறைஷியருக்கு முன்னுரிமை.

தாத்துர் ரிகாப் போர்.

1192. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம் தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்து சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்துவிட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக் கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததனால் தான் அந்தப் போருக்கு ‘தாத்துர் ரிகாஉ – ஒட்டுத் துணிப்போர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஹதீஸை அறிவித்த பின் அபூ மூஸா (ரலி), தாம் இதை அறிவித்ததைக் தாமே விரும்பாமல், ‘நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல் தான் இருந்தேன்” என்றார்கள். தம் நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லை போலும்.

புஹாரி :4128 அபூ புர்தா இப்னு அபீ மூஸா (ரஹ்).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | 1 Comment

நபி(ஸல்)அவர்கள் கலந்து கொண்ட போர்கள்.

1188. அப்துல்லாஹ் இப்னு யஸீது (ரலி) (மழைத் தொழுகை நடத்தப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் பராஃ (ரலி), ஜைத் இப்னு அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் இப்னு யஸீது (ரலி) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். மிம்பரில் ஏறாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தினார்கள். பின்னர் பாவமன்னிப்புத் தேடினார்கள். பிறகு சப்தமாக ஓதி, இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பாங்கும் இகாமத்தும் சொல்லவில்லை.

புஹாரி: 1022 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி).

1189. நான் ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?’ என்று அவர்களிடம் வினவப்பட்டது. ‘பத்தொன்பது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். ‘நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?’ என்று வினவப்பட்டபோது, ‘பதினேழு” என்றார்கள். ‘இவற்றில் முதல் போர் எது?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘உஸைரா’ அல்லது ‘உஷைர்’ என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3949 அபூ இஸ்ஹாக் (ரலி).

1190. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு புனிதப் போர்களில் கலந்துகொண்டேன்.

புஹாரி : 4473 புரைதா (ரலி).

1191. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைப் பிரிவுகளில் பங்கெடுத்த ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூ பக்ர் (ரலி) தளபதியாக நியமிக்கப்படடிருந்தார்கள். ஒரு முறை எங்களுக்கு உஸாமா (ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

புஹாரி : 4270 ஸலமா பின் அக்வஹ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on நபி(ஸல்)அவர்கள் கலந்து கொண்ட போர்கள்.

ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் போரிடுதல்.

1187. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா (ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். மேலும், அபூதல்ஹா (ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், ‘அதை அபூ தல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

புஹாரி :3811 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் போரிடுதல்.

மற்ற போர்கள் பற்றி…

1186. முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். ‘தூகரத்’ என்னுமிடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன” என்று கூறினான். நான், ‘அவற்றை யார் பிடித்துச் சென்றது?’ என்று கேட்டேன். அதற்கவன், ‘கத்ஃபான் குலத்தார்” என்று பதில் சொன்னான். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, ‘யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். ‘நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப்போகும்) நாள்” என்று (பாடியபடி) கூறிக் கொண்டே அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் ‘ரஜ்ஸ்’ எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்ற போது) அவர்கள்விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக் கொண்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தக் கூட்டத்தினர் தாகமுடன் இருந்த போதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்து விட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச் சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அக்வஃ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். எனவே, மென்மையாக நடந்து கொள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.

புஹாரி : 4194 ஸலமா பின் அக்வஹ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on மற்ற போர்கள் பற்றி…

அல்லாஹ் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது?

கேள்வி எண்: 75. இறைவன் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்? Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது?

அகழ்ப் போர் பற்றி…

1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்” தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

புஹாரி : 2837 அல் பராஉ பின் ஆஸிப் (ரலி).

1183. நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.

புஹாரி : 3797 ஸஹ்ல் பின் ஸஅது(ரலி).

1184. ”மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை. அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக” என்று (பாடியபடி) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

புஹாரி 3795 அனஸ் இப்னு மாலிக் (ரலி)

1185. அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், ‘நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) ‘நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்திருக்கிறோம்” என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. எனவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்காவாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!” என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

புஹாரி : 2961 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on அகழ்ப் போர் பற்றி…