கேள்வி எண்: 76. “அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு தாராளமாக ஆகாரம் வழங்குகின்றான். மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும் இவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி அதைக்கொண்டே பெரிதும் திருப்தி அடைகின்றார்கள். ஆனால், மறுமைக்கு எதிரில் இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை” என்ற திருமறை வசனம் எது? இதன் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் என்ன?
பதில்: இதன் அத்தியாயம்: 13, வசனம்: 26.
இவ்வசனத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:-
→ ஒருவனை செல்வந்தனாக ஆக்குவதோ அல்லது அவனை ஏழையாக ஆக்குவதோ அல்லாஹ்வின் நாட்டம்.
→ அதனால் இறைவன் நமக்கு வழங்கியதைக் கொண்டு பொருந்திக் கொள்ள வேண்டும்.
→ செல்வந்தர்களைக் கண்டு பொறாமைப்படுவது இறைவனின் நாட்டத்திற்கு எதிராக எண்ணங்கொள்வதாகும். ஏனென்றால் அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியது இறைவனின் விருப்பம். அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க நமக்கு துளியும் இடமில்லை. அல்லாஹ் இத்தகைய எண்ணங்களிலிருந்து நம்மைக் காப்பானாக!
→ அல்லாஹ் நமக்கு அளித்த இவ்வுலக வாழ்க்கை சோதனைக் காலமாகும்.
→ ஆகவே, நாம் அல்லாஹ் அளித்த நற்பேறுகளில் மூழ்கி மகிழ்ந்து மறுமையின் நற்பேறுகளை மறந்து விடக்கூடாது.
→ மறுமையின் இன்பமோ என்றென்றும் நிலைத்திருக்கும் பேரின்பமாகும்.
வாழ்க்கையில் இறைவன் நமக்கு வழங்கியதைப் பொருந்திக் கொண்டவர்களாகவும், இறைவன் மற்றவர்களுக்கு அளித்துள்ள அதிக செல்வத்தின் மீது பொறாமைக் கொள்ளாமலும், அல்லாஹ் நமக்கு வழங்கியவற்றிலிருந்து நம்மிலும் ஏழ்மையாக இருக்கும் வறியவர்களுக்கு கொடுத்துதவியும் வாழ்ந்து ஈருலக நற்பேற்றினைப் பெற்றிட வல்ல இறைவனிடம் இறைஞ்சுதல் வேண்டும்.