அல்லாஹ்வின் ஓர் உயர் படைப்பான மனிதன் நல்வாழ்வு பெறுவதற்கு, இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையைக் கொடுத்தான் என்பதை நாம் முன்னர் விளக்கமாகப் பார்த்தோம். எனினும், மனிதன் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் பலவந்தப்படுத்தவில்லை.
மாறாக மனிதனுக்கு
– சிந்திக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தான்
– நல்லது கெட்டதைப் புரிந்துக் கொள்ளக்கூடிய திறமையைக் கொடுத்தான். அத்துடன்,
– இவற்றைத் தான் விரும்பியவாறு பயன்படுத்தும் சுதந்திரத்தையும் கொடுத்தான்.
அல்லாஹ்வின் இவ்வேற்பாடு காரணமாக ஒருவன் இஸ்லாத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ உரிமையும் சுதந்திரமும் பெறுகின்றான். இது எத்தகைய உயர்ந்த ஏற்பாடு என்பதைக் கீழுள்ள விவரங்களைப் படித்த பின் நீங்கள் உணருவீர்கள்.
ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன்:
நீங்கள், உங்களை ஒரு கல்லூரி மாணவன் அல்லது மாணவி என நினைத்துக் கொள்ளுங்கள். அக்கல்லூரியில் உங்களுக்கென ஒரு பாடத்திட்டம் உண்டு. அது நீங்கள் வாழும் நாட்டின் கொள்கைக்கமைய உருவாக்கப்பட்டதாகும். அதன்படி உங்களுக்குரிய பாடங்களை ஆசிரியர் நடத்துவார். வருட இறுதியில் உங்கள் கரங்களில் சில வினாத்தாள்கள் தரப்படும். அவை வருட முழுவதும் நீங்கள் கற்றவற்றை அனுசரித்துத் தயாரிக்கப்பட்டவையே.
நீங்கள் படிக்கும்பொழுது, ‘நன்றாக படிக்க வேண்டும்; காலத்தை வீணாகக் கழிக்கக் கூடாது’ என உங்கள் பெற்றோரும், ஆசிரியர்களும் மற்றும் உங்கள் நலன் விரும்பிகளும் கூறுவர். எனினும், படிப்பில் கவனம் செலுத்தும் சுதந்திரம் உங்களுக்கு இருந்தது. படிக்கலாம் அல்லது படிக்காமல் விடலாம் என்ற தெரிவு உங்களுக்கு இருந்தது.
அதேபோன்று, நீங்கள் பெற்றுக்கொண்ட வினாத்தாள்களிலும், ‘இந்த விடையைத்தான் எழுத வேண்டும்’ என்ற நிர்பந்தம் எவரிடத்திலிருந்தும் உங்களுக்கு இல்லை. எனவே, நீங்கள் அந்த வினாத்தாள்கள் தொடர்பாக எதுவும் செய்யும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளீர்கள். அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி சரியோ, பிழையோ விரும்பிய விடையை நீங்கள் எழுதலாம். அல்லது அவ்வினாத்தாள்களில், அவற்றுக்கு சம்பந்தம் இல்லாத எதையும் கீறி வைக்கலாம். அல்லது அவற்றை கிழித்து வீசிவிட்டு பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறலாம்.
நீங்கள், உங்களுக்குத் தரப்பட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவ்வினாத்தாள்கள் தொடர்பாக எப்படி நடந்துக் கொள்கிறீர்களோ அதற்கேற்ப உங்களுக்கு மகிழ்வைத் தரும் நல்லதோர் எதிர்காலம் அமையும். அல்லது வேதனையைத் தரும் இருண்ட வாழ்வு அமையும்.
சிலவேளை, உங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் ‘நீ இதைத்தான் படிக்க வேண்டும்; அதைப் படிக்கக் கூடாது’ என்று கண்டிப்பான கட்டளை பிறப்பித்தால், அல்லது வருட இறுதியில் வழங்கும் வினாத்தாள்களில் ‘இந்த விடையைத்தான் நீ எழுத வேண்டும்’ என்ற பலவந்தம் இருந்தால், உங்களுக்காக, உங்கள் அறிவை அளவிடும் பரீட்சையொன்றை வைப்பது அர்த்தமற்றது; வேடிக்கையானது என நீங்கள் நினைப்பீர்கள், உண்மையும் அதுதான். இத்தகைய பரீட்சை ஒன்றின் விளைவாக ஒருவரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது முற்றிலும் தவறானது என்பதை உங்கள் அறிவு உங்களுக்குக் கூறும். ஏனெனில், இவற்றில் உங்கள் அறிவுக்கோ திறமைக்கோ எத்தகைய வேலையும் இல்லாதிருப்பதாகும்.
அல்லாஹ், முற்றிலும் இந்த விதமாகத்தான் இஸ்லாம் தொடர்பாக மனிதர்களுடன் நடந்து கொள்கின்றான்.
‘நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதன்படி வாழுங்கள்; விமோசனம் பெறுவீர்கள்’ என்று அடிக்கடி போதனை புரிவது இருந்தாலும் அதை ஏற்பதிலும் பின்பற்றுவதிலும் மனிதனுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது; அவனது தெரிவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதோடு, என்றோ ஒருநாள் அவனது உலக வாழ்வு முடிவடைந்து விடும்; அவன் மரணமடைந்து விடுவான்.
அதன்பின்னர் மறுமையில், அவன் வாழ்வு தொடர்பான விசாரணைக்காக அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவான். அந்த விசாரணை மண்டபத்தில் அவன் எவரது உதவி ஒத்தாசையுமின்றி தனித்து நிற்பான். அப்பொழுது அவன் இவ்வுலகில் செய்த சிறிய பெரிய எல்லா செயல்களும் எல்லாத் தகவல்களும் கொண்டு வரப்படும். அவற்றில் எதுவும் விடுபடாதவாறு விசாரணை நடக்கும். இறுதியில், இஸ்லாத்தை ஏற்று நன்மை செய்தான் எனக் காணப்பட்டால், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று சுவர்க்கம் புகுவான். அதேபோன்று அவன் இஸ்லாத்தை நிராகரித்துத் தான்தோன்றித்தனமாக, பாவங்கள் செய்து வாழ்ந்ததாகக் காணப்பட்டால் வல்லமையுள்ள அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி நரகம் செல்வான்.
இது மனிதனுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம், தெரிவு செய்யும் உரிமை என்பன மூலம் அவனே முயன்று பெற்றுக் கொண்ட முடிவாகும்.
இவ்வாறின்றி, ‘நான் சொன்னபடியே இஸ்லாத்தை ஏற்று வாழணும்; அதில் ஓர் அணுவளவும் வித்தியாசப்படக் கூடாது; அந்த உரிமையும் சுதந்திரமும் உங்களுக்கு இல்லை’ என்று அல்லாஹ் முடிவாகவே மொழிந்திருந்தால் அந்த மனிதனை விசாரிப்பதும், வெகுமதியோ தண்டனையோ வழங்குவது அர்த்தமற்றது; வேடிக்கையானது என்றாகி விடும். பரிபூரண ஞானம் கொண்ட அல்லாஹ், அந்த மனிதனைப் பொறுத்து அவனே முடிவெடுக்கும் வகையில் தனது மார்க்கத்தை – இஸ்லாத்தை வழங்கி, அதன்படி வாழ்வது அல்லது வாழாதிருப்பது என்ற இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும் உரிமையை வழங்கியமை அவனுடைய தன்னிரகற்ற ஆற்றலை நிரூபிக்கும் வகையில் அமையப் பெற்றதாகும்.
இதன்படி மனிதன் தன் புத்தியை பயன்படுத்தி இஸ்லாத்தைத் தெரிவு செய்து வாழ்ந்தால் அவனது வாழ்வு ஈருலகிலும் ஒளிமயமானதாக இருக்கும். மாறாக அவன் நடந்தால், இருள் சூழ்ந்த பாதையில் அவன் தன் பயணத்தை மேற்கொண்டுள்ளான் என்றே கூற வேண்டும். முன்னையது அவனுக்கு சுவனத்தையும், பின்னையது அவனுக்கு நரகத்தையும் சொந்தமாக்கி விடும்.
குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.