3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் – மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:35. இம்ரானின் மனைவி “என் இறைவனே என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து ஏற்று கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்.
3:36. (பின் தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையை பெற்றதும் “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண் பெண்ணை போலல்ல. (மேலும் அந்த தாய் சொன்னாள்) ” அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகிறேன்.
3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்னையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார். ” இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள் (பதில்) கூறினாள்.
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது (வணங்குதல்) கொண்டிருந்த போது, மலக்குகள் (வான தூதர்கள்) அவரை சப்தமாக அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் (தூதராகவும்) இருப்பார்” எனக் கூறினர்.
3:40. அவர் கூறினார் “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும், அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும், மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
அல் குர்ஆன்: ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)