சில மதங்களில் இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கருத்து இஸ்லாமிய இறைக்கருத்துக்கு நேர் எதிரானதாகும்.
அல்லாஹ், ஒருபோதும் ஒரு மனிதராகவோ, அல்லது வேறு ஏதாவது உயிரினமாகவோ அவதாரம் எடுத்து வருவது இல்லை. காரணம், அவன் அழிவே இல்லாதாவன். ஏனைய எல்லாமே அழியக்கூடியன. மனிதனும் மற்றைய உயிரினங்களும் பிறந்து இறந்து விடுவன. மற்ற இயற்கைப் படைப்புகளும் என்றோ அழியக்கூடியன. எனவே, அழியக்கூடியவை மூலமாக அழிவே இல்லாதவன் அவதாரம் எடுத்துத் தோற்றம் தருகிறான் எனக் கூறுவதும் நம்புவதும் இறைவனைக் கேலி செய்வது போன்ற செயலாகும்.
சிலவேளை, அப்படி யாராவது நம்புவதாக வைத்துக் கொள்வோம். அவரிடம் நாம் இப்படி சில விளக்கங்களைக் கேட்கலாம். மனிதன் மற்றும் உயிரினங்களுக்கு பிறப்பு, பசி, தாகம், நோய், தூக்கம், சோர்வு, மலஜலம் கழித்தல், பாலுணர்வு, இறப்பு போன்ற இன்னோரன்ன பலவீனங்கள் உள்ளன. இத்தகைய மனிதனாகவோ, மற்றொரு உயிராகவோ இறைவன் அவதாரம் எடுத்து வருகிறான் என்றால், இந்த எல்லாவிதமான பலவீனங்களும் அந்த இறைவனுக்கு இருப்பதாக நம்ப முடியுமா?
இறை அவதாரப் புருஷர்கள் எனப் போற்றப்பட்ட எத்தனையோ பேர் செத்து மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டனர். அப்படியாயின் இறைவன் செத்து விட்டான் எனக் கொள்ளமுடியுமா?
இஸ்லாம் இந்தக் கருத்தை அடியோடு ஏற்பதில்லை. அல்லாஹ் அவனில் அவனாக இருக்கிறான். அன்றி, அவனது படைப்புகள் எதுவாகவும் ஆகிவிடுவதில்லை.
குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.