“அல்லாஹ் ஒருவனே; அவனன்றி வேறு இறைவன் இல்லை” என்ற கருத்தை வழங்கும் இஸ்லாத்தில் பல தெய்வ நம்பிக்கைக்கு இம்மியளவும் இடமில்லை. அத்தகைய நம்பிக்கைக்குரிய அனைத்து வாயில்களும் மூடிவிட்ட இஸ்லாத்தில்
நம்பிக்கையிலும் நடைமுறையிலும் சொல்லிலும் செயலிலும் வணக்கத்திலும் வழிபாடுகளிலும்
பல தெய்வம் என்ற வாடை கூட வீசுவது இல்லை. மற்ற மதங்களில் ஆளுக்கொரு தெய்வம் இருப்பதை நீங்கள் காணலாம். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தெய்வங்களை கும்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் உலகின் ஒரு கோணத்திலிருந்து மறுகோணம் வரை வாழும் முஸ்லிம்கள் நம்பிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரே இறைவன் அல்லாஹ் மட்டுமே.
ஆங்கிலத்தில் ‘காட்’ (God) என்பார்கள். அந்த சொல்லுக்கு ‘காட்ஸ்’ (Gods) என்ற பன்மைச் சொல் உண்டு.தமிழில் ‘இறைவன்’, ‘தெய்வம்’, ‘கடவுள்’ என்ற சொற்களுக்கு முறையே ‘இறைவர்கள்’, ‘தெய்வங்கள்’, ‘கடவுளர்’ என்ற பன்மைச் சொற்கள் உள்ளன. இப்படி, மற்றைய மொழிகளிலும் இறைவனைக் குறித்துக் காட்டும் பெயரிலேயே பன்மைக்கு ‘ஒன்றுக்கு மேல்’ என்ற கருத்துக்கு இடமுண்டு. ஆனால் ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்குப் பன்மைச் சொல்லொன்று இல்லை. உண்மையில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லே தன்னில் பங்காளி ஒருவரைச் சேர்த்துக் கொள்ளாது தனித்து நிற்கின்றது. இதிலிருந்து இஸ்லாம் கூறும் ஏகத்துவம், ‘இறைவன் ஒருவன்’ என்ற கருத்து அவனது பெயரிலேயே அமைந்து விட்டதை நீங்கள் அவதானிக்கலாம்.
குடும்பம், கல்விக்கூடம், காரியாலயம், அரசு போன்ற பலவற்றின் நிர்வாகம் சீராக இருக்க வேண்டுமாயின் அவற்றின் அதிகாரம் ஒருவர் கையில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். மாறாக பலர் அல்ல, சம அதிகாரம் உள்ள இருவர் மட்டும் இருந்தாலே அவற்றின் ஒழுங்கு சீர்குழைந்து விடும்; கட்டுப்பாடு இல்லாது போய்விடும்; நற்பயன்களுக்கு மாறாக தீய பயன்களே கிட்டும்.
இது இப்படியாயின், இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்துக்கும், இதிலுள்ள எண்ணிலடங்காப் படைப்புகளுக்கும், அவற்றைப் பரிபாலித்து, போஷித்து, பாதுகாத்து, ஒழுங்காக இயங்கச் செய்யும் இறைவர்கள் பலர் அல்லது இருவராவது இருக்க முடியுமா? அப்படி இருந்தால் இப்பிரபஞ்சம் சீராக, ஓர் ஒழுங்கின்படி இயங்க முடியுமா? நிச்சயமாக அப்படியில்லை என்றும், இப்பிரபஞ்சத்தை ஒழுங்காக இயக்கும் இறைவன் ஒருவன்தான் என்றும் உங்கள் அறிவு சான்று பகரும் என்பதில் ஐயமில்லை.
இந்த வகையில் இஸ்லாத்தின் இறைக்கருத்து எவ்வளவு இயற்கையாகவும், சிறப்பாகவும் இருக்கின்றது என்பதைப் பார்த்தீர்களா?
குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.