1745. ”(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குகை வாசிகள் மூவர் கதை.
புஹாரி : 2215 இப்னு உமர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், குகை, சிரமம், துன்பம், நன்மை, பெற்றோர். Bookmark the permalink.