பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3156
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களுடனும் அம்ர் இப்னு அவ்ஸ்(ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் இப்னு ஸுபைர்(ரஹ்) பஸராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ 70-ம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம் ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா(ரஹ்) அறிவித்தார்.
நான் அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்களின் தந்தையின் சகோதரரான ஜஸ்உ இப்னு முஆவியாவுக்கு எழுத்தராக இருந்தேன். அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு ‘திருமணம் புரிந்து கொள்ளக் கூடாத இரத்த உறவு தங்களிடையே இருந்தும் ஒருவரையொருவர் மணந்து கொண்டு மஜூஸிகளை (மண பந்தத்திலிருந்து) பிரித்து வையுங்கள்’ என்று உத்தரவிட்டு அவர்களின் கடிதம் ஒன்று எங்களுக்கு வந்தது. உமர்(ரலி) மஜூஸிகளிடமிருந்து ஜிஸ்யா வரி வசூலிக்கவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3157
அதன் காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஜர் (பஹ்ரைன்) பகுதியில் வசித்து வந்த மஜூஸிகளிடமிருந்து ஜிஸ்யா வரி வசூலித்துள்ளார்கள்” என்று சாட்சி சொன்னார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3158
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்சாரீ(ரலி) எனக்குக் கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்து வரும்படி அனுப்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா(ரலி) வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, ‘அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், ‘ஆமாம், இறைத்தூதர் அவர்களே!” என்று பதிலளித்தார்கள். ‘எனவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3159
பக்ரு இப்னு அப்தில்லாஹ் அல் முஸனீ(ரஹ்) மற்றும் ஸியாத் இப்னு ஜுபைர் இப்னி ஹய்யா(ரஹ்) ஆகிய இருவரும் அறிவித்தார்கள். உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தில்) இணைவைப்போருடன் போர் புரிய மக்களைப் பெரும்பெரும் நகரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது (‘ருஸ்தும்’ என்கிற பாரசீகத் தளபதியான) ‘ஹுர்முஸான்’ இஸ்லாத்தை ஏற்றார். உமர்(ரலி) ஹுர்முஸான்(ரஹ்) அவர்களிடம், ‘நான் என்னுடைய இந்தப் (புனிதப்) போர்களில் உங்களிடம் தான் ஆலோசனை கேட்கப் போகிறேன்” என்றார்கள். அதற்கு அவர், ‘சரி, நீங்கள் போரிட விரும்பும் நாடுகளின் நிலையும் அதிலுள்ள எதிரிகளின் நிலையும் ஒரு தலையும் இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் கொண்ட ஒரு பறவையின் நிலை போன்றதாகும். (அதன்) இரண்டு சிறகுகளில் ஒன்று ஒடிக்கப்பட்டு விடுமாயின், கால்கள் இரண்டும் தலையும் (மீதியுள்ள) ஒரு சிறகின் உதவியால் எழுந்து விடும். மற்றொரு சிறகும் ஒடிக்கப்பட்டு விடுமாயின், இரண்டு கால்களும் தலையும் (மீண்டும்) எழும். தலையே நொறுக்கப்பட்டால் இரண்டு கால்களும், இரண்டு சிறகுகளும், தலையும் போய்விடும். (சாசானியப் பேரரசனான) கிஸ்ரா (குஸ்ரூ) தான் தலை. சீசர் ஒரு சிறகும் பாரசீகர்கள் மற்றொரு சிறகும் ஆவர். எனவே, கிஸ்ராவை நோக்கிப் புறப்படும்படி முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுங்கள்” என்று (ஆலோசனை) கூறினார்.
அறிவிப்பாளர்கள் பக்ரு இப்னு அப்தில்லாஹ்(ரஹ்), ஸியாத் இப்னு ஜுபைர்(ரஹ்) ஆகிய இருவரும் சேர்ந்து, ஜுபைர் இப்னு ஹய்யா(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாவது.
உடனே, உமர்(ரலி) எங்களை (போருக்குப் புறப்படும்படி) அழைத்து, நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) அவர்களை எங்களுக்குத் தலைவராக்கி (அனுப்பி)னார்கள். இறுதியில், நாங்கள் எதிரியின் பூமியில் (ஈரானிலுள்ள நஹாவந்தில்) இருந்தபோது எங்களைத் தாக்கிட கிஸ்ராவின் தளபதி நாற்பதாயிரம் பேர் கொண்ட படையுடன் வந்தான். (அவர்களின்) மொழி பெயர்ப்பாளர் எழுந்து, ‘உங்களில் ஒருவர் பேசட்டும்” என்று சொல்ல, முகீரா இப்னு ஷுஅபா(ரலி), ‘நீ விரும்பியதைப் பற்றி கேள்” என்றார்கள். அந்த மொழி பெயர்ப்பாளர், ‘நீங்கள் யார்? (எதற்காக வந்திருக்கிறீர்கள்?)” என்று கேட்டதற்கு முகீரா(ரலி), ‘நாங்கள் அரபு மக்கள். நாங்கள் பசியின் காரணத்தால் (காய்கள், பழங்களின்) தோலையும் கொட்டையையும் சப்பித் தின்று கொண்டிருந்தோம்; முடியையும் கம்பளியையும் அணிந்து கொண்டிருந்தோம். இந்நிலையில் தான், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி – அவன் புகழ் உயர்ந்தது; அவன் மகத்துவம் தெளிவானது – (அல்லாஹ்) எங்களிலிந்தே ஒரு நபியை எங்களிடம் அனுப்பினான். அவரின் தாய், தந்தையை நாங்கள் (நன்கு) அறிவோம். எங்கள் நபியும், எங்கள் இறைவனின் தூதருமான அவர் உங்களுடன் நாங்கள் போரிட வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிட்டார். ‘ஒன்று, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வழிபட வேண்டும்; அல்லது நீங்கள் ‘ஜிஸ்யா’ வரி செலுத்த வேண்டும். (இதற்காக நாங்கள் போராடி) இந்தப் போராட்டத்தில் எங்களில் எவரேனும் கொல்லப்பட்டால், அவர் (இதற்கு முன்) ஒருபோதும் கண்டிராத இன்பமயமான சொர்க்கத்திற்குச் செல்வார்; (கொல்லப்படாமல் வெற்றி வாகை சூடி) எங்களில் ஒருவர் உயிர் வாழ்ந்தால் உங்கள் பிடரிகளை அவர் உடைமையாக்கிக் கொள்வார்’ என்று எங்கள் இறைவன் தெரிவித்த தூதுச் செய்தியை எங்கள் நபி எங்களுக்கு அறிவித்தார்கள்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3160
(இந்தப் போரின்போது எதிரிகளின் மீது தாக்குதல் தொடுப்பதைத் தாமதிப்பதாக முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) மீது குற்றம் சாட்டிய வேளையில்) நுஃமான்(ரலி), ‘இதைப் போன்ற (கடும் துன்பம் நிறைந்த) ஒரு போரில் நபி(ஸல்) அவர்களுடன் உங்களை அல்லாஹ் கலந்து கொள்ளச் செய்திருந்தால் (நபி(ஸல்) அவர்களும் தாக்குதலைத் தொடங்கிடத் தாமதப்படுத்தி அதனால் காத்திருக்க வேண்டிய சிரமம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், அதனால் கிடைக்கவிருக்கும் மறுமைப் பலன்களின் எதிர்பார்ப்பால்) உங்களுக்கு அது வருத்தம் தந்திருக்காது; அதை இழிவாக எண்ணச் செய்திருக்காது. ஆயினும், நான் அல்லாஹ்வின் தூதருடன் பல போர்களில் கலந்து கொண்டிருக்கிறேன். பகல் காற்று வீசத் தொடங்கி (சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து பிற்பகல்) தொழுகை நேரங்கள் வந்து விடும் வரை காத்திருப்பது அவர்களின் வழக்கமாகும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3161
அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். ‘அய்லா’வின் அரசன் நபி(ஸல்) அவர்களுக்கு (‘தல்தல்’ எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபி(ஸல்) அவர்கள் அவனுக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவனுக்கு எழுதினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3162
ஜுவைரிய்யா இப்னு குதாமா அத் தமீமீ(ரஹ்) அறிவித்தார். (ஒருமுறை) நாங்கள், ‘எங்களுக்கு அறிவுரை கூறுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அப்போது உமர்(ரலி), ‘(இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவர்களைக் காக்கும்) அல்லாஹ்வின் பொறுப்பை நிறைவேற்றும்படி உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அது உங்கள் நபியின் பொறுப்பும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3163
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளை, அவர்களுக்கு பஹ்ரைனின் நிலங்களை வருவாய் மானியமாக எழுதித் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் குறைஷிச் சகோதரர்களுக்கும் இதே போன்று எழுதித் தரும் வரை நாங்கள் (இவற்றை) ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறிவிட்டார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அது குறைஷிகளுக்குக் கிடைக்கும்; அல்லாஹ் அதை விரும்பும் பட்சத்தில்” என்று கூறினார்கள். குறைஷிகளுக்கும் எழுதித் தரும்படி அன்சாரிகள் (தொடர்ந்து) வற்புறுத்திக் கூறினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், ‘(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே) உங்களை விடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, (மறுமையில், எனக்குச் சொந்தமான) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3164
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று (மூன்று முறை) என்னிடம் சொல்லியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டிருந்தபோது பஹ்ரைனின் நிதி வர, அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் மரணமடைந்து விட்டிருந்)தால் அவர் என்னிடம் வரட்டும்” என்று கூறினார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நம்மிடம் பஹ்ரைனின் செல்வம் வந்தால் உனக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்” என்று கூறினேன். உடனே அவர்கள் என்னிடம், ‘அதை அள்ளிப் போட்டுக் கொள்” என்றார்கள். நான் அதை நிறைவாக அள்ளிப் போட்டுக் கொண்டேன். அவர்கள் என்னிடம், ‘அதை எண்ணிக் கொள்” என்றார்கள். நான் அதை எண்ணிப் பார்த்தேன். அது ஐநூறு இருந்தது. எனவே, அவர்கள் எனக்கு (மொத்தம்) ஆயிரத்து ஐநூறு தந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3165
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அதைப் பள்ளி வாசலில் பரப்பி வையுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அது நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது. அப்போது, அப்பாஸ்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப் போரில் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத் தொகை கொடுத்திருக்கிறேன்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். உடனே, அப்பாஸ்(ரலி), தம் துணியில் அதை அள்ளிப் போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைச் சுமக்க) முடியவில்லை. எனவே, ‘(உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவருக்கு இதை என் (தோளின்) மீது தூக்கி வைக்கும்படி உத்தரவிடுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் உத்தரவிட மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ்(ரலி), ‘நீங்களாவது என் தோள் மீது இதைத் தூக்கி வையுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘வைக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்கள். பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தூக்கிச் சுமக்க முயன்றார்கள். (அப்போதும்) அதை அவர்களால் தூக்க முடியவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்களிடம், ‘இதைத் தூக்கி என் மீது சுமத்தும்படி இவர்களில் ஒருவருக்கு உத்தரவிடுங்கள்” என்று (மீண்டும்) கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மாட்டேன்” என்று சொல்லிவிட்டார்கள். பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தம் தோளில் சுமந்து கொண்டு நடக்கலானார்கள். நபி(ஸல்) அவர்கள், அப்பாஸ்(ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்துவிட்டு அவர்கள் மறையும் வரை அவர்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம் கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் நபி(ஸல்) அவர்கள் தம் இடத்தைவிட்டு எழுந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3166
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அதந் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3167
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் (தம் அறையிலிருந்து) வெளியே வந்து, ‘யூதர்களை நோக்கி நடங்கள்” என்று கூறினார்கள். உடனே, நாங்கள் புறப்பட்டுச் சென்று ‘பைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம். அப்போது நபியவர்கள், ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஈடேற்றம் பெறுவீர்கள். மேலும், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அணிந்து கொள்ளுங்கள். நான் உங்களை அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரின் செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்று விடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3168
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), ‘(அந்த) வியாழக்கிழமை! எப்படிப்பட்ட வியாழக்கிழமை (தெரியுமா)?’ என்று சொல்லிவிட்டு சிறு சரளைக் கற்களை அவர்களின் கண்ணீர் நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். நான், ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே! வியாழக்கிழமை (அப்படி) என்ன (நடந்தது)?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(அன்று தான்) அல்லாஹ்வின் தூதருக்கு அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாகிவிட்டது. அப்போது அவர்கள், ‘என்னிடம் புஜ எலும்பு ஒன்றைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை (இறுதியுபதேசத்தை) நான் எழுதுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்” என்று கூறினார்கள். மக்கள் (கருத்து பேதம் கொண்டு) சச்சரவிட்டார்கள். (இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள்), ‘இறைத்தூதரின் முன்பாக சச்சரவிட்டுக் கொள்வது அழகல்ல” (என்று கூறினார்கள்.) மக்கள், ‘அவர்களுக்கு என்ன நேர்ந்தது? (எழுதித் தர முடியாத அளவிற்கு) அவர்கள் பலவீனமடைந்துவிட்டார்களா? அவர்களிடமே (விளக்கம்) கேளுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள இந்த (இறை நினைவில் லயித்திருக்கும்) நிலையே சிறந்தது” என்று கூறிவிட்டு மூன்று விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்: (அந்த மூன்று விஷயங்களாவன:) இணைவைப்பவர்களை அரபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள். நான் (வெளிநாட்டிலிருந்து வரும்) தூதுக் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கி வந்ததைப் போன்றே நீங்களும் பரிசுகளை வழங்கி வாருங்கள்.
(அறிவிப்பாளர் தொடர்ந்து கூறுகிறார்: மூன்றாவது கட்டளையை ஒன்று, நபி(ஸல்) அவர்கள் சொல்லாமல் மௌனமாக இருந்து விட்டிருக்க வேண்டும்; அல்லது அதை அவர்கள் கூறி (இந்நிகழ்ச்சியை எனக்கு அறிவித்தவரும் கூறி) நான் அதை மறந்து விட்டிருக்க வேண்டும். (எப்படியாயினும், மூன்றாவது) ஒரு நல்ல விஷயம் தான்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘இப்படிச் சொன்ன அறிவிப்பாளர், சுலைமான் இப்னு அபில் முஸ்லிம் அல் அஹ்வல்(ரஹ்) தாம்” என்று கூறுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3169
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், ‘சரி (உண்மையைச் சொல்கிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் தந்தை யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இன்னார்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார் தான்” என்று கூறினார்கள். அவர்கள், ‘நீங்கள் சொன்னது உண்மை தான்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே அதையும் அறிந்து கொள்வீர்கள்” என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நரகவாசிகள் யார்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு, எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீட்hகளாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புக மாட்டோம்” என்று கூறினார்கள். பிறகு, ‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘சரி, அபுல் காசிமே!” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஆம் (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3170
ஆஸிம்(ரஹ்) அறிவித்தார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘குனூத்’ ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)” என்று கூறினார்கள். ‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)’ என்று நீங்கள் கூறியதா இன்னார் நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அவர் பொய் சொன்னார்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களைக் குறித்து, ‘அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் சில கிளையினருக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்” என்று அறிவித்தார்கள். அப்போது அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்து அதை ஓதும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைக்கும் மக்கள் சிலரிடம் அனுப்பி வைத்தார்கள். என்று (அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்… அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். பனூ சுலைம் குலத்தாருக்கு நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. எனவே, அவர்களின் மீது கோபமடைந்ததைப் போல் வேறெவர் மீதும் நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்து நான் பார்த்ததில்லை.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3171
உம்மு ஹானீ(ரலி) அறிவித்தார். மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்களை, அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், ‘யார் அது?’ என்று கேட்டார்கள். நான், ‘அபூ தாலிபின் மகள் உம்மு ஹானீ” என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், ‘உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)” என்றார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை ஹுபைராவின் மகனான இன்னாரை தான் கொல்லப் போவதாகக் கூறுகிறார்” என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (எனவே கவலை வேண்டாம்)” என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3172
யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அறிவித்தார். அலீ(ரலி) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, நாங்கள் ஓதுகிற புத்தகம் வேறெதுவும் எங்களிடம் இல்லை. இந்த ஏட்டில் காயங்களுக்கான பழி வாங்கல்கள் (ஸகாத்தாகவும் உயிரீட்டுத் தொகையாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விபரங்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
“மேலும், (அதில் கூறப்பட்டுள்ளதாவது:) மதீனா நகரம் ‘அய்ர்’ மலைக்கும் (உஹுது மலை அமைந்துள்ள) இன்ன இடத்திற்கும் இடையிலுள்ள பகுதி வரை புனிதமானதாகும். அதில் எவன் (மார்க்கத்தில் இல்லாத) புதிய ஒன்றை உருவாக்குகிறானோ அல்லது (அவ்விதம்) புதிதாக ஒன்றை உருவாக்குபவனுக்குப் புகலிடம் கொடுக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து கடமையான வணக்கம் உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது.
“விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான) காப்பாளர்களின் அனுமதியின்றி, பிறரைத் தன் காப்பாளர்களாக ஆக்கினால் அவன் மீதும் அவ்வாறே (அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும்) ஏற்படும். முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவன் மீதும் அவ்வாறே (அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும்) ஏற்படும்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3173
ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவித்தார். (நபித் தோழர்களான) அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் அவர்கள் கொல்லப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அவர்களிடம் முஹய்யிஸா அவர்கள் வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். பிறகு (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத் அவர்களும் (அவரின் சகோதரர்) ஹுவைய்யிஸா இப்னு மஸ்வூத் அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) பேசிக் கொண்டே சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘பெரியவர்களைப் பேச விடு. பெரியவர்களைப் பேச விடு” என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமானார்கள். பிறகு, முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் (நபி(ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் அவர்களை இன்னார் தான் கொலை செய்தார் என்று) சத்தியம் செய்து நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்துப் பழிவாங்கிக் கொள்ளும்) உரிமை பெற்றுக் கொள்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வது? நாங்கள் அங்கே (கொலை நடந்த இடத்தில்) இருக்கவில்லை; கொலை செய்தவனை (கொலை செய்யும் போது) பார்க்கவும் இல்லையே” என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் யூதர்கள் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்பதற்கு) ஐம்பது சத்தியங்கள் செய்து உங்களிடம் தம் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கட்டும்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) எடுத்துக் கொள்வது?’ என்று கேட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் தாமே (அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் அவர்களின் கொலைக்கான) உயிரீட்டுத் தொகையை (அவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3174
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ சுஃப்யான் இப்னு ஹாப் அவர்கள் (தாம் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு) ஷாம் நாட்டிற்கு குறைஷிகளின் வணிகக் குழு ஒன்றில் சென்றிருந்தபோது (பைஸாந்திய மன்னன் (ஹிராக்ளியஸ் தமக்கு ஆளனுப்பி தம் அவைக்கு வரச் சொன்னதாகவும், அது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடனும் குறைஷி நிராகரிப்பாளர்களுடனும் ஒப்பந்தம் செய்திருந்த கால கட்டத்தில் ஷாம் நாட்டில் நடந்ததாகவும் அறிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3176
அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். தபூக் போரின்போது நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்: 1. என்னுடைய மரணம் 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். 3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்) 4. பிறகு செல்வம் பெரும் வழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார். 5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது. 6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3177
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். என்னை அபூ பக்ர்(ரலி) ‘யவ்முன் னஹ்ர்’ (துல்ஹஜ் 10ம்நாள்) அன்று மதீனாவில் பொது அறிவிப்புகள் செய்பவர்களுடன் (அவர்களில் ஒருவனாக) அனுப்பினார்கள். (அவர்கள் செய்யச் சொன்ன பொது அறிவிப்பு இதுதான்:) இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லத்தை (கஅபாவை) நிர்வாணமாக எவரும் வலம்வரக் கூடாது.
மேலும், ‘ஹஜ்ஜுல் அக்பர் (பெரிய ஹஜ்)’ உடைய நாள் என்பது இந்த ‘யவ்முன் னஹ்ர்’ (துல்ஹஜ் 10ம் நாள்) தான். இது, ‘பெரிய ஹஜ்” என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் மக்கள் (உம்ராவைச்) ‘சிறிய ஹஜ்’ என்று அழைத்ததேயாகும். அபூ பக்ர்(ரலி) அந்த ஆண்டில் (இணை வைக்கம்) மக்களிடம் (இஸ்லாமிய அரசு செய்த) ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜத்துல் வதா’ செய்த ஆண்டில் இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3178
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3179
அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர வேறெதையும் எழுதி வைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் (இந்த ஏட்டில்), ‘மதீனா நகரம் ஆயிர் மலையிலிருந்து இன்ன இடம் வரை புனிதமானதாகும். எவன் இங்கு (மார்க்கத்தில்) புதிய (கருத்து அல்லது செயல்பாடு) ஒன்றைத் தோற்றுவிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்களின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) அவர்களில் சாமானியர் கூட அடைக்கலம் தரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களுடைய சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான தன்) காப்பாளர்களின் அனுமதியின்றிப் பிறரைத் தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீதும் அல்லாஹ்வின் சாபமும், வானவர்களுடைய சாபமும், மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3180
ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார். (ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி), ‘திம்மீகளிடமிருந்து (இஸ்லாமிய அரசின் பிரஜைகளான பிற மதத்தாரிடமிருந்து) ஒரேயொரு தங்க நாணயத்தையோ பொற்காசையோ கூடப் பெற முடியாத காலம் வரும்போது உங்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்டார்கள். உடனே, ‘அபூ ஹுரைராவே! அவ்வாறு (ஒரு காலம்) ஏற்படும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூ ஹுரைரா(ரலி), ‘ஆம், அபூ ஹுரைராவின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இதை நான் உண்மையே அறிவிக்கப்பட்டு, உண்மையே பேசிய (நபிய)வர்களிடமிருந்து கேட்டுத்தான் சொல்கிறேன்” என்று பதிலளித்தார்கள். உடனே மக்கள், ‘எதனால் அத்தகைய காலம் ஏற்படும்?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), ‘அல்லாஹ்வின் (அடைக்கலப்) பொறுப்பும் அல்லாஹ்வின் தூதருடைய (அடைக்கலப்) பொறுப்பும் அவமதிக்கப்படும். (அதாவது முஸ்லிம்கள் ஒப்பந்தப் படி நடக்காமல் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.) அதனால் அல்லாஹ் (பிற மதங்களைச் சேர்ந்த) ஒப்பந்தப் பிரஜைகளின் உள்ளங்களுக்குத் துணி வைத்தந்து விடுவான். அவர்கள் தங்கள் கரங்களில் இருப்பவற்றைத் தடுத்துக் கொள்வார்கள். (ஜிஸ்யா வரி கட்ட மறுத்துப் போர் புரியவும் துணிந்து விடுவார்கள்.)
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3181
அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். “ஸிஃப்பீன் போரில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?’ என்று நான் அபூ வாயில் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம். (நான் அப்போரில் கலந்து கொண்டேன்.) மேலும், நான் சஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) சொல்லக் கேட்டேன்: (நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டுங்கள். அபூ ஜந்தல் அபயம் தேடி வந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன். (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன்.) (அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்தது. எங்களக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை நாங்கள் அடைய (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழிவகுத்தன. ஆனால், இது வேறு விஷயம். (முஸ்லிம்களுக்கிடையே மூண்டுவிட்ட இந்தப் போரில் ஈடுபடுவது அழிவதைத் தான் தரும்)” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3182
அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந்தோம். அப்போது ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) எழுந்து நின்று சொன்னார்கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம் சாட்டாதீர்கள்.) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். போரிடுதல் பொறுத்தமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்கள். உமர் அவர்கள், ‘போரில் கொலையுண்டு விடும்போது நம்முடைய வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களின் வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள். இல்லையா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர்(ரலி), ‘அப்படியிருக்க, நாம் ஏன் நம்முடைய மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பி விடுவதா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்” என்று பதிலளித்தார்கள். உமர்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று நபி(ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூ பக்ர் அவர்கள், ‘அவர்கள் அல்லாஹ்வின் துதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்” என்று கூறினார்கள். அப்போது ‘அல் ஃபத்ஹ்’ (‘உமக்கு நாம் பம்ரங்கமான வெற்றியை அளித்து விட்டோம்’ என்று தொடங்கும்) அத்தியாயம் அருளப்பட்டது. அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உமருக்கு இறுதிவரை ஓதிக் காட்டினார்கள். அப்போது உமர் அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! வெற்றியா அது?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (வெற்றி தான்)” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3183
அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். குறைஷிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்த (ஹுதைபிய்யா உடன் படிக்கையின்) காலகட்டத்தில் என் தாயார் இணைவைப்பவராக தன் தந்தையுடன் (என் பாட்டனாருடன்) என்னிடம் வந்திருந்தார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரியவளாக, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயார் என்னிடம் ஆசையோடு வந்திருக்கிறார். நான் அவரின் உறவைப் பேணி நடந்து கொள்ளலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் உறவைப் பேணி நடந்து கொள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3184
பராஉ(ரலி) அறிவித்தார். (ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், ‘இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்” என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், ‘நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, ‘இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்’ என்று எழுதுங்கள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்” என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ‘ ‘இறைத்தூதர்’ என்னும் சொல்லை அழித்து விடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்” என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, ‘உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3185
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒரு முறை (கஅபா அருகே) நபி(ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷி இணைவைப்பாளர்கள் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத், நபி(ஸல்) அவர்களை நோக்கி ஒட்டகத்தின் (கர்ப்பத்திலுள்ள) குட்டியை மூடியிருக்கும் ஜவ்வைக் கொண்டு வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள், ஃபாத்திமா(ரலி) வரும் வரை (ஸஜ்தாவிலிருந்து) தம் தலையை உயர்த்தவில்லை. ஃபாத்திமா(ரலி) வந்தவுடன் (அந்த ஜவ்வை) நபி(ஸல்) அவர்களின் முதுகிலிருந்து அகற்றிவிட்டார்கள். மேலும், அதைச் செய்தவனுக்குத் தீங்கு நேரட்டுமெனப் பிரார்த்தனைசெய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! குறைஷிகளில் முக்கியப் பிரமுகர்களை நீ கவனித்துக் கொள். இறைவா! அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, உக்பா இப்னு அபீ முஐத், உமய்யா இப்னு.. கலஃப் அல்லது உபை இப்னு கலஃப்… ஆகியோரை நீ கவனித்துக் கொள்” என்று அவர்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தித்தார்கள். நான் இவர்களையெல்லாம் பத்ருப் போரில் கொல்லப்பட்டுக் கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமைய்யாவைத் தவிர… அல்லது உபையைத் தவிர. ஏனெனில், அவன் பருமனான மனிதனாக இருந்தான்.. அவனை அவர்கள் (முஸ்லிம் வீரர்கள்) இழுத்துச் சென்றபோது அவன் கிணற்றில் போடப்படுவதற்கு முன்பே அவனுடைய மூட்டுகள் துண்டாம் (தனித் தனியாகக் கழன்று)விட்டன.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3186-3187
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘நடப்படுகிற கொடி ஒன்று உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார். மற்றொருவர், ‘அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3188
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன். ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3189
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது ‘இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது இல்லை. ஆயினும், ஜிஹாத் எனும் அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
மேலும் மக்கா வெற்றியின்போது ‘(மக்களே!) வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் வாழ்ந்த யாருக்கும் இதில் போரிட அனுமதி தரப்படவில்லை. எனக்கும் கூட (மக்கா வெற்றியின் போது) பகலின் சிறிது நேரத்தில் மட்டும் (இதில் போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதப்படுத்தியுள்ள காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே திகழும். அதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. அங்கு கீழே விழுந்து விடக்கும் பொருளை அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. அங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அப்பாஸ்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களின் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறதே” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்) இத்கிரைத் தவிரத் தான்” என்று பதிலளித்தார்கள்.