54.நிபந்தனைகள்

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2711-2712

மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்து விட வேண்டும்’ என்பதும் ஒன்றா இருந்தது. இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல்(ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி(ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி(ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், ‘விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) யோசித்துப் பாருங்கள். அவர்களின் இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவார். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்” (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.
பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2713

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த) பெண்களை (திருக்குர்ஆன் 60:10-12) இறை வசனத்தின் கட்டளைப்படி சோதித்து வந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை அப்பெண்களில் ஏற்றுக் கொள்கிறவரிடம், ‘நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத் தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம் விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்ச் சொல் வழியாகவே தவிர விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2714

ஜரீர்(ரலி) அறிவித்தார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டும் என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2715

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். ‘தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ‘ஸகாத்’ கொடுக்க வேண்டும்; எல்லா முஸ்லிம்களுக்கும் நலம் நாட வேண்டும்’ என்ற நிபந்தனைகளை ஏற்று அல்லாஹ்வின் தூதரிடம் நான் விசுவாசப் பிரமாணம் செய்தேன்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2716

‘மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்சந் தோப்பை வாங்கியவர் (விளைச்சல் எனக்கே உரியது என்ற) நிபந்தனையிடாதிருந்தால், விற்கிறவருக்கே அதனுடைய விளைச்சல் உரியதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2717

(அடிமைப் பெண்ணான) பரீரா, தன்னுடைய விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக) உதவி கேட்டு என்னிடம் வந்தார். அதுவரை தன் விடுதலைப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த தொகையில் சிறிதையும் அவர் செலுத்தியிருக்கவில்லை. எனவே, நான் அவரிடம், ‘நீ உன் எஜமானார்களிடம் திரும்பிச் சென்று ‘உன்னுடைய விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உன் சார்பாக நான் செலுத்தி விடுவதையும் உன் வாரிசுரிமை எனக்கே உரியதாய் ஆகி விடுவதையும் அவர்கள் விரும்பினால் நான் அவ்வாறே செய்கிறேன்’ என்று சொல்’ எனக் கூறினேன். பரீராவும் இதை அவர்களிடம் சொல்ல அவர்கள் அதை (ஏற்க) மறுத்துவிட்டனர். மேலும், ‘ஆயிஷா உன்னை விடுதலை செய்வதின் வாயிலாக (அல்லாஹ்விடம்) நன்மையை நாடியிருந்தால் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உன்னுடைய வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டனர். அதை ஆயிஷா(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சொல்ல அவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘நீ (பரீராவை) வாங்கி விடுதலை செய்து விடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2718

ஜாபிர்(ரலி) அறிவித்தார். (ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்துவிட்ட என்னுடைய ஒட்டகம் ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே, அது இதற்கு முன் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என்னும் அளவிற்கு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘இதை எனக்கு ஓர் ஊக்கியாவுக்கு நீங்கள் விற்று விடுங்கள்” என்று கேட்டார்கள். அவ்வாறே, என் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை அதில் நான் சவாரி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இட்டுவிட்டு அதை அவர்களுக்கு நான் விற்றுவிட்டேன். (அவர்களும் என் நிபந்தனையை ஒப்புக் கொண்டார்கள்.) நாங்கள் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்தபோது அந்த ஒட்டகத்தை நபி(ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்கக்) கொண்டு சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் செல்ல, எனக்குப் பின்னாலேயே நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் வரவழைத்து), ‘உன் உட்டகத்தை நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. உன்னுடைய அந்த ஒட்டகத்தை நீயே எடுத்துக் கொள். அது உன்னுடைய செல்வம்” என்று கூறினார்கள்.

ஜாபிர்(ரலி) ‘தாம் அதன் முதுகில் மதீனா வரை சவாரி செய்துவர அனுமதிக்க வேண்டும்’ என்று நிபந்தனையிட்டதையும், நபி(ஸல்) அவர்கள் அதை அனுமதித்ததையும், எவ்வளவு தொகைக்கு நபி(ஸல்) அதை வாங்கினார்கள் என்பதையும் குறிப்பிட்டு சிற்சில வார்த்தை வேறுபாடுகளுடன் பல அறிவிப்புகள் வந்திருப்பதை இமாம் புகாரி(ரஹ்) இங்கு பதிவு செய்துள்ளார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2719

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம், ‘(எங்கள்) பேரீச்ச மரங்களை எங்களுக்கும் எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே பங்கிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘வேண்டாம்” என்று கூறவே, அன்சாரிகள், ‘நீங்கள் எங்களுக்கு பதிலாக (எங்கள் நிலத்தில்) உழையுங்கள்; நாங்கள் விளைச்சலை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறோம்” என்று (முஹாஜிர்களிடம்) கூறினார்கள். முஹாஜிர்களை ‘செவியேற்றோம்; கட்டுப்பட்டோம் (உங்கள் நிபந்தனையை ஏற்றுக் கொண்டோம்)” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2720

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் பிரதேசத்து நிலங்களை (அங்கிருந்த) யூதர்களுக்க, ‘அதில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும்’ என்றும், ‘அதிலிருந்து வரும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது’ என்றும் நிபந்தனையிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2721

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான். என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2722

ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். எனவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்கு விட்டு வந்தோம். சில வேளைகளில் இந்தப் பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. எனவே, அவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்பட்டோம். (வெள்ளிக் காசுகளான) திர்ஹம்களுக்குப் பகரமாக குத்தகைக்கு விடவேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்படவில்லை.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2723

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம், வாங்கும் எண்ணமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்கு கேட்க வேண்டாம். (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது.) தன் சகோதரர் (ஒருவர்) வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தான் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம். தன் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம். ஒரு பெண், தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்வதற்காக தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்து விடுமாறு (தன் கணவனிடம்) கேட்க வேண்டாம். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2724-2725

அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள். கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2726

ஆயிஷா(ரலி) அறிவித்தார். விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த அடிமைப் பெண்ணான பரீரா என்னிடம் வந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! என் எஜமானார்கள் என்னை விற்கப் போகிறார்கள். எனவே, என்னை நீங்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்யுங்கள்” என்று கூறினார். நான், ‘சரி (அப்படியே செய்வோம்)” என்று கூறினேன். அவர், ‘என் எஜமானர்கள், என் வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடாமல் என்னை விற்க மாட்டார்கள்” என்றார். அதற்கு நான், ‘அப்படியென்றால் உன்(னை வாங்க வேண்டிய) தேவை எனக்கில்லை” என்று கூறினேன். இதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்ற போது அல்லது இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டிய போது அவர்கள், ‘பரீராவின் விஷயம் என்ன?’ என்று கேட்டுவிட்டு, ‘அவர்கள் விரும்பியதையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும். நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு” என்று கூறினார்கள். எனவே, நான் அவரை வாங்கி விடுதலை செய்து விட்டேன். அவரின் எஜமானார்கள், ‘அவரின் வாரிசுரிமை எங்களுக்கே உரியது” என்று நிபந்தனை விதித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(அடிமையை) விடுதலை செய்பவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2727

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (சந்தைக்கு வருவதற்கு முன்பு மொத்த) வியாபாரிகளை வழியில் எதிர் கொண்டு சரக்குகளை வாங்குவதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். உள்ளூர்வாசி கிராமவாசிக்காக வாங்கித் தருவதையும், ஒரு பெண் தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்துவிடும்படி நிபந்தனையிடுவதையும், தன் சகோதரன் விலை பேசும் அதே பொருளை, தானும் விலை பேசுவதையும், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளுக்கு) அதிக விலை கேட்டு, (வேண்டுமென்றே) விலை ஏற்றி விடுவதையும், (ஆடு மாடுகளின்) மடியை கனக்கச் செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

முஆத்(ரஹ்) அவர்களும் அப்துஸ்ஸமத்(ரஹ்) அவர்களும் ஷுஅபா(ரஹ்) அவர்களிடமிருந்து இவ்வாறே அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2728

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

உபை இப்னு கஅப்(ரலி), ‘மூஸா, அல்லாஹ்வின் தூதரவார்.” என்று தொடங்கி, நபி(ஸல்) அவர்கள் (மூஸா (அலை) தொடர்பாகக்) கூறிய முழு ஹதீஸையும் கூறத் தொடங்கினார்கள்: களிறு(அலை) அவர்கள், ‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா?’ என்று (மூஸா (அலை) அவர்களை நோக்கிக்) கேட்டார்கள். மூஸா (அலை) அவர்கள் களிறு (அலை) அவர்களின் நடவடிக்கைகளை ஆட்சேபித்து) முதல் முறையாகக் கேட்டபது மறதியால் கேட்டதாகவும், நடுவில் சொன்னது அவர் விதித்த நிபந்தனையாகவும், மூன்றாவது முறை கேட்டது, வேண்டுமென்றே செய்ததாகவும் இருந்தது.

(இது தொடர்பான இறைவசனங்கள் வருமாறு:)

“நான் மறந்து போனதற்காக என்னைத் (திரும்பிப் போகச் சொல்லித் தண்டித்து விடாதீர்கள்.) என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.

“பிறகு இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தார்கள்; அப்போது, அவர் (களிறு) அவனைக் கொன்றுவிட்டார்.

“மேலும், அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். அங்கே அவர்கள் இருவரும் கீழே விழ இருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே அவர் (களிறு), அதைச் செப்பனிட்டு நிறுத்தி வைத்தார்கள்.”

(பார்க்க: திருக்கர்ஆன் 18ஆம் அத்தியாயம்; 66-82 வசனங்கள்.)

‘வகனா வராஅஹும் மலிக்குன்’ என்னும் வசனத்தை ‘வகான அமாமஹும் மலிக்குன்’ என்று (இன்னோர் ஓதல் முறைப்படி) இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியுள்ளார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2729

ஆயிஷா(ரலி) அறிவித்தார். பரீரா என்னிடம் வந்து, ‘நான் என் எஜமானர்களிடம் ஒவ்வோர் ஆண்டும் ஓர் ஊகியா வீதம் ஒன்பது ஊகியாக்கள் தருவதாகக் கூறி விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன். எனவே, எனக்கு உதவுங்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘அவர்கள் விரும்பினால் நான் ஒன்பது ஊக்கியாக்களையும் (எண்ணிக்) கொடுத்து விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே சேர வேண்டும்” என்று கூறினேன். பரீரா, அவரின் எஜமானர்களிடம் சென்று அவர்களிடம் இதைக் கூறினார். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து (திரும்பி) வந்து, ‘நான் நீங்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன்; அவர்கள், ‘வாரிசுரிமை தங்களுக்கே உரியது’ என்று கூறி உங்கள் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று கூறினார். அப்போது அங்கே அமர்ந்திருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதை செவிமடுத்துக் கொண்டிருந்தால், நான் நபி(ஸல்) அவர்களுக்கு விபரத்தைக் கூறினேன். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘பரீராவை நீ வாங்கிக் கொண்டு, அவரின் வாரிசுரிமை உனக்கே சேர வேண்டும் என்று நிபந்தனையிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்” என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். பின்னர் இறைத்தூதர் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனைப் புகழ்ந்துரைத்துவிட்டு, ‘சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாததாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும். வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2730

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கைபர் வாசிகள் என் கைமூட்டுகளைப் பிசகச் செய்துவிட்டபோது என் தந்தை உமர்(ரலி) எழுந்து நின்று உரையாற்றினார்கள். அவ்வுரையில், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் பிரசேத்து யூதர்களிடம் அவர்களின் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் உங்களை இங்கு வசிக்கச் செய்யும் வரை நாம் உங்களை வசிக்க விடுவோம்’ என்று கூறினார்கள். (என்னுடைய மகன்) அப்துல்லாஹ் இப்னு உமர் அங்கேயிருந்த தன்னுடைய சொத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார். அவர் அன்றிரவு தாக்கப்பட்டார். அதனால் அவரின் இருகைகளின் மூட்டுகளும் இருகால்களின் மூட்டுகளும் பிசம்விட்டன. அங்கு அவர்களைத் தவிர வேறு பகைவர்கள் எவரும் இல்லை. அவர்கள் நம்முடைய பகைவர்களும் நம் சந்தேகத்திற்குரியவர்களும் ஆவர். அவர்களை நாடு கடத்தி விடுவதே பொறுத்தமென்று கருதுகிறேன்” என்று கூறினார்கள். உமர்(ரலி) (யூதர்களை) நாடு கடத்துவதென்று இறுதி முடிவெடுத்துவிட்டபோது, (யூதர்களின் தலைவனான) அபுல் ஹுகைக் உடைய மகன்களில் ஒருவன் வந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களை முஹம்மத்(ஸல்) அவர்கள் (கைபரிலேயே) வசிக்கச் செய்து, எங்கள் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தமும் செய்த, அதை (நாங்கள் பேணி வந்தால் அங்கேயே தொடர்ந்து வசிக்கலாம் என்று) நிபந்தனையிட்டிருக்க, நீங்கள் எங்களை (அங்கிருந்து) வெளியேற்றுகிறீர்களா?’ என்று கேட்டான். அதற்கு உமர்(ரலி), ‘கைபரிலிருந்து நீ வெளியேற்றப்பட்டு, (நீண்ட கால்களும்) சம்ப்புத் தன்மை(யும்) கொண்ட உன்னுடைய ஒட்டகம் உன்னைச் சுமந்துகொண்டு இரவுக்குப் பின் இரவாக நடந்துசென்று கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் உனக்கு எப்படி இருக்கும்?’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறியதை நான் மறந்து விட்டேன் என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘அது அபுல் காசிம் (முஹம்மத் – ஸல்) விளையாட்டாகக் கூறினார்கள் எனம்” என்று சொன்னான். அதற்கு உமர்(ரலி), ‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே!” என்று கூறினார்கள். பிறகு, அந்த யூதர்களை உமர்(ரலி) நாடு கடத்திவிட்டார்கள். அவர்களுக்குக் கிடைத்திருந்த விளைச்சலின் விலையைப் பணமாகவும், ஒட்டகமாகவும், பொருட்களாகவும், ஒட்டகச் சேணங்களாகவும், கயிறுகளாகவும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

இன்னோர் அறிவிப்பில் ஹம்மாது இப்னு ஸலமா(ரஹ்) நபி(ஸல்) அவர்கள் குறித்த அறிவிப்பில் மட்டும் சுருக்கமாக கூறுகிறார்கள். (உமர்(ரலி) குறித்த அறிவிப்பை சுருக்கமாக்கவில்லை.)

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2731-2732

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான் இப்னி ஹகம் ஆகிய இருவரும் – ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு – கூறினார். ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘காலித் இப்னு வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் ‘கமீம்’ என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக் காத்திருக்கின்றனர். எனவே, வலப்பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் இப்னு வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக்குழுப் படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பன் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். நபி(ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் (‘மிரார்’ என்னும் இடத்தில்) அவர்களின் வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்தது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) ‘ஹல்ஹல்’ என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், ‘கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது, ‘கஸ்பா’ பிடிவாதம் பிடிக்கிறது” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்” என்று கூறினார்கள். பிறகு, ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்” என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களைவிட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின்அருகே முகாமிட்டார்கள். மக்கள் அதிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் எடுக்கலானார்கள். இறுதியில், அவர்கள் மிச்சம் வைக்காமல் தண்ணீர் முழுவதையும் இறைத்து (அதை காலி செய்து)விட்டார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தாகம் எடுப்பதாக முறையிடப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவியெடுத்து அதைப் பள்ளத்தில் பேகுதிபடி மக்களுக்கு உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (பள்ளத்தில் அம்பைப் போட்டதும்) அதிலிருந்து அவர்களுக்காகத் தண்ணீர் பீறிட்டு வெளிப்பட்டது. அவர்கள் அங்கிருந்து புறப்படும் வரை (தண்ணீர் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது). இந்த நிலையில் புதைல் இப்னு வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி(ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், ‘(முஹம்மத் அவர்களே!) கஅப் இப்னு லுஅய், மற்றும் ஆமிர் இப்னு லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களைவிட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்” என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கிறோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே (இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத்) தடையாக இருக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாள்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்துவிட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் என்னுடைய இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாம் விடும் வரை அவர்களடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்” என்று கூறினார்கள். ‘நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்” என்று கூறிவிட்டு புதைல் இப்னு வரகா குறைஷிகளிடம் சென்று, ‘நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்றார். அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், ‘அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினர். அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், ‘அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று கூறினர். புதைல், ‘அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உடனே, (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, ‘என் சமுதாயத்தாரே! நீங்கள் என் தந்தையைப் போல் (என் மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தனர்.

உர்வா, ‘நான் உங்கள் மகனைப் போல் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தனர். அப்போது உர்வா, ‘உக்காழ் (சந்தை) வாசிகளிடம் உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களிடம் கொண்டு வந்து விட்டேன் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். அப்போது அவர், ‘முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம்ட என்னைச் செல்ல விடுங்கள்” என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்” என்று கூறினர். அவரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி(ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது உர்வா, ‘முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் பொறுத்தமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்ட துண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்றாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பலமுகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கிறேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களைவிட்டுவிட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடையவ)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்” என்று கூறினார். (இதைக் கேட்ட) அபூ பக்ர்(ரலி) அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, ‘நாங்கள் இறைத்தூதரைவிட்டுவிட்டு ஓடி விடுவோமா?’ என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, ‘இவர் யார்?’ என்று கேட்டார். மக்கள் ‘அபூ பக்ர்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, ‘நீங்கள் முன்பு எனக்கு உதவியிருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்” என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்; நபி(ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களின் தாடியைப் பிடித்தபடி இருந்தார். அப்போது முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்) அவர்களின் தலைப்பக்கமாக நின்றிருந்தார்கள். எனவே உர்வா, நபி(ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா(ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, ‘உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து” என்று கூறிய வண்ணமிருந்தார்கள். அப்போது உர்வா தன்னுடைய தலையை உயர்த்தி, ‘இவர் யார்?’ என்று கேட்க மக்கள், ‘இவர் முகீரா இப்னு ஷுஅபா” என்று கூறினார்கள். உடனே உர்வா, ‘மோசடிக்காரரே! நீர் மோசடி செய்தபோது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா? என்று கேட்டார். முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எம்ப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பொருட்களை எடுத்தார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா(ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்தபோது அவரின் தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருள்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்கள். – பிறகு உர்வா, நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தம் இரண்டு கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள். நபியவர்கள் உளூச் செய்யும்போது, அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் செல்வார்கள். நபியவர்களுடன் அவர்கள் பேசும்போது தம் குரல்களைத் தாழ்த்திக் கொள்வார்கள். மேலும், நபியவர்களுக்கு கண்ணியமளிக்கும் விதத்தில் அவர்களைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்க்க மாட்டார்கள். (இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்து நேரடியாக அறிந்தபின்) உர்வா தன் தோழர்களிடம் சென்று, ‘என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்து அளிக்கிற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தங்களின் குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். அவரை கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை. மேலும், அவர் உங்கள் முன் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். எனவே, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். உடனே பனூம்னானா குலத்தைச் சேர்ந்த ஒருவர், ‘என்னை அவரிடம் செல்ல விடுங்கள்” என்றார். அதற்கு அவர்கள், ‘சரி, செல்லுங்கள்” என்று கூறினர். அவர் நபி(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகிற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். எனவே, இவரிடம் தியாக பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்” என்றார்கள். உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் அனுப்பி ஒன்று வைக்கப்பட்டது. மக்கள் ‘தல்பியா’ கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், ‘சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே” என்று (தமக்குள்) கூறினார். தம் தோழர்களிடம் திரும்பிச் சென்றபோது, ‘தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றைக் கீறி காயப்படுத்தி அடையாளமிடப் பட்டிருப்பதை கண்டேன். எனவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை” என்று கூறினார். உடனே, அவர்களில் மிக்ரஸ் இப்னு ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, ‘என்னை அவரிடம் போக விடுங்கள்” என்று கூறினார். மக்காவாசிகள், ‘சரி, நீங்கள் அவரிடம் போங்கள்” என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்” என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தான். அவன் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் இப்னு அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார் அறிவிப்பாளர் இக்ரிமா(ரஹ்) கூறினார்: சுஹைல் இப்னு அம்ர் வந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் விவகாரம் சுலபமாம்விட்டது” என்று (‘ஸஹ்ல்–சுலபம்’ என்னும் பொருள் கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததை நற்குறியாகக் கருதும் வகையில்) கூறினார்கள். சுஹைல் மின் அம்ர் வந்து, ‘(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், ‘பேரருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரல்…” என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். சுஹைல், ‘ரஹ்மான் – கருணையன்புடையோன்’ என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், ‘இறைவா! என் திருப்பெயரால்..’ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்” என்றார். முஸ்லிம்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்றே இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ ‘பிஸ்மிக்க அல்லாஹும்ம – இறைவா! உன் திருப்பெயரால்’ என்றே எழுதுங்கள்” என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘இது இறைத்தூதர் முஹம்மது அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தம்’ என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், ‘இறைத்தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, ‘முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, ‘முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதீனாலும் நிச்சயம் நான் இறைத்தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்றே எழுதுங்கள்” என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், அவர்களுடன் தகராறு செய்யாமல்விட்டுக் கொடுத்து ஒத்துப் போகவிட்டதற்குக் காரணம் அவர்கள், ‘அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட (மக்கா நகரத்)தை கண்ணியப்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்” என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத்தான்.-

பிறகு சுஹைலுக்கு நபி(ஸல்) அவர்கள், ‘எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் வலம்வர விடாமலும் தடுக்கக் கூடாது’ என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) ‘நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்’ என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்” என்று கூறினார்; அவ்வாறே எழுதினார். மேலும் சுஹைல், ‘எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’ என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், ‘சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?’ என்று வியப்புடன் கேட்டார்கள். அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும்போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் இப்னு அம்ர்டைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள். உடனே (அவரின் தந்தையான) சுஹைல், ‘முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்” என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே” என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், ‘அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், ‘நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், ‘நான் அனுமதியளிக்கப் போவதில்லை” என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், ‘நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்” என்று கூறினார். அபூ ஜந்தல்(ரலி), ‘முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

அப்போது (நடந்ததை) உமர்(ரலி) கூறினார். உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘நீங்கள் சத்தியமாக இறைத்தூதர் இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், இறைத்தூதர் தான்” என்று பதிலளித்தார்கள். நான், ‘நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கிறோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.)” என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உவதக் கூடியவன்” என்று பதிலளித்தார்கள். நான், ‘விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் வலம் வருவோம்’ என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?’ எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை வலம்வருவீர்கள்” என்று கூறினார்கள். பிறகு நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, அபூ பக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் துதரல்லவா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; இறைத்தூதர் தான்” என்று சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்” என்றார்கள். நான், ‘அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நண்பரே! இறைத்தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களின் சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள். நான், ‘அவர்கள் நம்மிடம், ‘நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை வலம்வந்தோம்” என்று சொல்லவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், ‘நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்’ என்று உங்களிடம் சொன்னார்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை வலம்வரத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள்.

(ஸுஹ்ரீ(ரஹ்) உமர்(ரலி) தொடர்ந்து சொன்னதாகக் கூறுகிறார்கள்:) நான் இப்படி (அதிருப்தியுடன் நபி(ஸல்) அவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, ‘எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்து ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தியாகப் பிராணியை அறுத்துவிட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி களையப் புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்துவிட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துவிட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்தார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடிகளையவும்) சென்றனர். பிறகு (சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த கால கூட்டத்தில்) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். உடனே, ‘இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தார்களாயின் (அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதைச்) சோதித்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையின் உண்மை நிலையை அல்லாஹ் தான் நன்கறிவான். மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் எனறு உங்களுக்குத் தெரிந்துவிட்டால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு (மனைவியராக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்கு (கணவர்களாக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களின் (நிராகரிப்பாளர்களான) கணவன்மார்கள் அவர்களுக்கு அளிந்திருந்த மஹ்ரை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். மேலும், அவர்களைத் தருமணம் செய்து கொள்வதில் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை; நீங்கள் அவர்களுக்குரிய மஹ்ரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால். மேலும், இறைவனை நிராகரித்துவிட்ட பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக் கொள்ளாதீர்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 60:10) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, உமர்(ரலி), இணைவைக்கும் மார்க்கத்திலிருந்த காலத்தில் தமக்கிருந்த இருமனைவிமார்களை அன்று தலாக் (விவாகரத்து) செய்துவிட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா இப்னு அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொரு வரை ஸஃப்வான் இப்னு உமய்யா அவர்களும் மணந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம் வந்து), ‘நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூ பஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம் பேரீச்சம் பழங்களைத் தின்றுகொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அபூ பஸீர்(ரலி) அவ்விரு நபர்களில் ஒருவரிடம், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்” என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்” என்றார். அபூ பஸீர் அவர்கள், ‘எனக்கு(அதை)க் காட்டு. அதை நான் பார்க்கிறேன்” என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்றுவிட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்றார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, ‘இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்” என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நின்றபோது, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார். (நீங்கள் அபூ பஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்” என்று கூறினார். உடனே அபூ பஸீர் அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவரின் தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்” என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூ பஸீர் அவர்கள், நபி(ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்தார்கள். பிறகு, குறைஷிகளில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தப்பிச் சென்று) அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்ற அவர்களின் செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனவே, குறைஷிகள் (அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், ‘குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்பி வேண்டாம்)” என்று கூறிவிட்டனர். அப்போதுதான் அல்லாஹ், ‘அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; அப்போது அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்தான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்த யாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்… இறை மறுப்பாளர்கள், தங்கள் உள்ளங்களில் வைராக்கியத்தை (அஞ்ஞான கால மூடச் சிந்தனையை) ஏற்படுத்தியபோது அல்லாஹ், தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்களின் மீதும் நிம்மதியை இறக்கியருளினான். மேலும், நம்பிக்கையாளர்களை இறைவாக்கைப் பேணி நடப்போராய் ஆக்கினான். அவர்கள் தாம் அதற்கு மிகவும் அருகதையுடையோராயும் உரிமையுடையோராயும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்’ என்னும் (திருக்குர்ஆன் 48:24-26) வசனத்தை அருளினான்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2733

ஆயிஷா(ரலி) அறிவித்தார். மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் பெண்களை (அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாமா) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சோதித்து வந்தார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமார்களில் யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களுக்காக, அவர்களின் கணவன்மார்கள் செலவிட்ட (மஹ்ர்) தொகைகளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விரும்படியும், நிராகரிக்கும் பெண்களுடன் திருமணம் பந்தம் வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லாஹ் (குர்ஆனில் சட்டம் அருளி) முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டபோது, உமர்(ரலி), அபூ உமய்யாவின் மகள் கரீபாவையும், ஜர்வல் அல் குஸாயீயின் மகளையும் (அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால்) தலாக் செய்துவிட்டார்கள். எனவே, கரீபாவை முஆவியா இப்னு அபீ சுஃப்யானும் மற்றொருத்தியை (ஜர்வலின் மகளை) அபூ ஜஹ்மும் மணந்தார்கள். முஸ்லிம்கள் தங்கள் மனைவிமார்களுக்குச் செலவிட்டவற்றை (மஹ்ர் தொகையை) திருப்பிச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்ள நிராகரிப்பவர்கள் மறுத்தபோது, ‘இறைநிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்(கள் நிராகரிப்பாளர்களிடம் சென்று அவர்களின் மனைவிகளாம் விட்டிருக்கும் பட்சத்தில் அவர்)களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹ்ரில் சிறிதளவு அந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்க வில்லையாயின், பின்னர் உங்களுக்குப் போர்ச் செல்வங்கள் கிடைக்கும்போது உங்களில் யாருடைய மனைவிமார்கள் அங்கே சென்றார்களோ (அவர்களின்) அந்தக் கணவன்மார்களுக்கு அவர்கள் வழங்கிய மஹ்ருக்குச் சமமான தொகையைக் கொடுத்து விடுங்கள்” (திருக்குர்ஆன் 60:11) என்னும் வசனத்தை அல்லாஹ் அருளினான். ஹிஜ்ரத் செய்து வந்த (இறைநம்பிக்கை கொண்ட) பெண்களில் எவருமே அதன் பின்னர் இஸ்லாத்தை நிராகரித்து (மதம் மாறிச்) சென்றதாக நாங்கள் அறியவில்லை. சமாதான உடன்படிக்கைக் காலத்தில் அபூ பஸீர் இப்னு உசைத் அஸ் ஸகஃபீ அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்தவராக நபி(ஸல்) அவர்களிடம் வந்ததாகவும் (குறைஷித் தலைவர்) அக்னஸ் இப்னு ஷுரைக் என்பவர் அபூ பஸீரை (மக்காவுக்குத்) திருப்பியனுப்பும் படி கேட்டு, நபி(ஸல்) அவர்களுக்கு (கடிதம்) எழுதியதாகவும் எங்களுக்குச் செய்தி எட்டிற்று.”.. என்று ஹதீஸ் முழுவதையும் சொன்னார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2734

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் இஸ்ரவேலர்களில் ஒருவரிடம் தனக்கு ஆயிரம் தீனார்கள் கடன் தரும்படி கேட்டதாகவிம் அந்த இஸ்ரவேலரும் காலக் கெடுவைக் குறிப்பிட்டு (அதற்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்டுமென்று நிபந்தனையிட்டு) அதை அவருக்குக் கொடுத்ததாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கூறினார்கள்.

இப்னு உமர்(ரலி) மற்றும் அதாஉ(ரஹ்) ஆகிய இருவரும், ‘கடன் கொடுப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்த காலக் கெடுவைக் குறிப்பிட்டால் அது செல்லும்” என்று கூறுகிறார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2735

ஆயிஷா(ரலி) அறிவித்தார். பரீரா, தன்னுடைய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்த (உதவி தேடி) என்னிடம் வந்தார். நான், ‘நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத் தொகையையும்) நான் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாம் விட வேண்டும்” என்று கூறினேன். இறைத்தூதர் வந்தபோது நான் இதை அவர்களிடம் கூறினேன். அவர்கள், ‘அவரை வாங்கி விடுதலை செய்து விடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது” என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரைமேடையின் மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்;) ‘மக்கள் சிலருக்கு என்ன நேர்ந்துவிட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே! இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2736

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 54, எண் 2737

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) கையில் கைபரில் (‘ஃதம்ஃக்’ என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்களும் ‘அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது’ என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.)

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.