மிகப்பெரும் தீமைகளில் இதுவும் ஒன்றாகும். சில பெண்கள் இறந்தவருக்காக ஓலமிடுகின்றனர். இறந்தவரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறி ஒப்பாரி வைக்கின்றனர். முகத்திலும், கன்னங்களிலும் அடித்துக் கொள்கின்றனர். அதுபோல ஆடையைக் கிழித்துக் கொள்கின்றனர். தலையை மழித்துக் கொள்கின்றனர், அல்லது தலை விரித்துப் போட்டு அதைப் பிய்த்துக் கொள்கின்றனர். இவையாவும் விதியைப் பொருந்திக் கொள்ளாததையும், துன்பத்தை சகித்துக் கொள்ளாததையுமே காட்டுகிறது. இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘(துன்பம் ஏற்படும் போது) முகத்தைப் பிறாண்டுபவளையும், ஆடையைக் கிழிப்பவளையும், நாசமே, கைசேதமே என்று புலம்புபவளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்’. (இப்னு மாஜா)
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘(துன்பம் ஏற்படும் போது) கன்னத்தில் அடித்துக் கொள்பவனும், சட்டையைக் கிழித்துக் கொள்பவனும், முட்டாள்தனமாய்ப் புலம்புபவனும் நம்மைச் சார்ந்தவனல்லன்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
‘ஒப்பாரி வைப்பவள், தான் மரணமடைவதற்கு முன்னரே தவ்பா செய்து திருந்திக் கொள்ளவில்லையெனில் தார் ஆடையும் சொரியை ஏற்படுத்தக்கூடிய சட்டையையும் அணிந்த நிலையில் மறுமையில் எழுப்பப்படுவாள்’ என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூமாலிக் (ரலி), நூல்: முஸ்லிம்
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.