கேள்வி எண்: 26. இன்று நாம் விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலே சென்று ‘மேகக் கூட்டங்கள் மலைகளைப் போன்று’ இருப்பதைக் காண்கிறோம். ஆனால், விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட திருமறையில் இப்பேருண்மையை விளக்கும் வசனம் எது?
பதில்: “(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிலிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான். அதை தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது” (அல்குர்ஆன்: 24:43)
சிறு விளக்கம்: பகல் நேரத்தில் விமானங்கள் மூலம் மேகங்களுக்குச் சென்றவர்கள் இந்த அரியக்காட்சியைப் பார்த்திருப்பார்கள். மேகங்கள் ஒன்றன் மீது ஒன்றாகவும், கூட்டங்களாகவும் நகர்ந்து செல்லும். அவைகள் பார்ப்பதற்கு மலைகளைப்போல் இருப்பதைக் காணலாம்.