மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-4)

மாதவிடாய் (ஹைல்)

ஹைல் என்பது பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க்கு சொல்லப்படும்.
 

மாதவிடாயின் (ஹைலின்) காலம்
 

பெண்களுக்கு ஒன்பது வயதிலிருந்து மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனுடைய குறைந்த காலத்திற்கும் கூடிய காலத்திற்கும் அளவு கூறமுடியாது. அதாவது ஒவ்வொரு மாதத்திலும் மிகவும் குறைந்த நாட்களில் மாத்திரம் மாதவிடாயாக இருந்து அதிக நாட்கள் சுத்தமாக இருப்பது. அல்லது ஒவ்வொரு மாதத்திலும் அதிக நாட்கள் மாதவிடாயாக இருந்து குறைந்த நாட்கள் சுத்தமாகவும் இருக்கலாம். இதற்கு கால அளவு சொல்லமுடியாது.

மாதவிடாய் இரத்தத்தின் நிறங்கள்

1. கருப்பு நிறமாக இருக்கலாம்.
 

பாத்திமா பின்த் அபூஹுபைஸ் என்னும் நபித்தோழி அவர்கள் உதிரப்போக்குள்ள பெண்ணாக இருந்தார்கள். பெண்கள் தெரிந்து கொள்ளக்கூடிய கருப்பு நிறமாக இருந்தால் தொழுகையை விட்டுவிடுங்கள், வேறு நிறமுள்ளதாக இருந்தால் அது உடம்பிலுள்ள நோய்தான். ஆகவே தொழுகையை விட வேண்டாம் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
 

2. சிவப்பு நிறமாக இருக்கலாம்.
 

3. மஞ்சள் நிறமாக இருக்கலாம்.
 

4. கலக்கமாக இருக்கலாம்.

– பெண்கள் தங்களின் மாதவிடாய் வரக்கூடிய இடத்தை பஞ்சால் துவட்டி மஞ்சள் நிறமுள்ள நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அதைப்பற்றி கேட்பதற்காக அனுப்புவார்கள். வெள்ளை நிறமுள்ளதாக நீங்கள் பஞ்சை காணும் வரைக்கும் அவசரப்பட வேண்டாம் என ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களுக்கு கூறி அனுப்புவார்கள். (முஅத்தா மாலிக்)

ஆனால் சுத்தமானதற்குப் பிறகு கலக்கமாக ஏதும் வந்தால் அதை கணக்கிடக் கூடாது.
நாங்கள் சுத்தமானதற்குப் பிறகு மஞ்சள் நிறமாகவோ அல்லது கலக்கமாகவோ ஏதும் வந்தால் அதை நாங்கள் கணக்கெடுக்கமாட்டோம் என உம்மு அதிய்யா என்னும் நபித்தோழி கூறுகின்றார்கள்.
(அபூதாவூத்)

இரண்டு மாதவிடாய்க்கு மத்தியிலுள்ள சுத்தத்தின் அளவு:-

இரண்டு ஹைலுக்கும் மத்தியிலுள்ள சுத்தத்துக்கும் அளவு சொல்ல முடியாது. அதாவது ஒரு பெண் ஒரு மாதத்தில் அதிக நாட்கள் மாதவிடாயாக இருந்து குறைந்த நாட்கள் சுத்தமாகவும் இருக்கலாம், அல்லது அதிகமான நாட்கள் சுத்தமாக இருந்து குறைந்த நாட்கள் மாதவிடாயாகவும் இருக்கலாம்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தெரிய வேண்டியவைகள்:-

1. மாதவிடாய் ஏற்பட்ட பெண் கடமையான சுன்னத்தான தொழுகைகளை தொழுவது ஹராமாகும். சுத்தமான பின் மாதவிடாயினால் விடுபட்ட தொழுகைகளை தொழவேண்டியதில்லை.

– நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது (மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைகளை தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)

2. சுன்னத்தான மற்றும் கடமையான நோன்பை நோற்பது ஹராமாகும். சுத்தமான பின் மாதவிடாயினால் விடுபட்ட நோன்பை நோற்பது அவசிமாகும்.

3. கஃபத்துல்லாவை தவாஃப் செய்வது ஹராமாகும்.
 

– ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்யும் எல்லாவற்றையும் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

– தவாஃப் என்பது தொழுகையாகும் என்றாலும் பேசுவதை அல்லாஹ் அனுமதித்து இருக்கின்றான், யார் (தவாஃப்) செய்யும்போது பேசுகின்றாரோ நல்லதையே பேசட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

4. பள்ளியில் தங்கியிருப்பது ஹராமாகும்.
 

குளிப்பு கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள், பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. (4:43)

5. உடலுறவு கொள்ளுதல் ஹராமாகும்.
 

மேலும் அவர்கள் (உதிரப்போக்கிலிருந்து) சுத்தமாகும்வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் சுத்தமாகி (குளித்து) விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள் நிச்சயமாக பச்சாதாபப்பட்டு மீளுகிறவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையாக இருப்பவர்களையும் அவன் நேசிக்கிறான். (2:222)
மேலும் (நபியே!) மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அது ஒரு அசௌகரியமாகும், எனவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள். (2:222)

6. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது தலாக் சொல்வது ஹராமாகும்.
 

7. மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் குளிப்பது கடமையாகும்.
 

நீங்கள் குளிக்கக் கடமைப்பட்டோராக இருந்தால் குளித்துப் பரிசுத்தமாகிக் கொள்ளுங்கள். (5:6)

நிஃபாஸ்:-
 

நிஃபாஸ் என்பது பிள்ளைபேறின் காரணமாக வரக்கூடிய இரத்தத்திற்கு சொல்லப்படும்.

நிஃபாஸுடைய குறைந்த கால எல்லை:-
 

நிஃபாஸுடைய குறைந்த காலத்திற்க்கு அளவு சொல்ல முடியாது. குழந்தை கிடைத்த அடுத்த வினாடியிலேயே இரத்தம் நின்று விட்டால் அந்தப் பெண் நிஃபாஸ் என்னும் பெருந்தொடக்கிலிருந்து சுத்தமாகிவிடுவாள். சுத்தமான பெண்ணுக்குள்ள சட்டம்தான் அப்பெண்ணுக்கும்.

நிஃபாஸுடைய அதிக கால எல்லை:-
 

நிஃபாஸுடைய அதிக காலம் நாற்பது நாளாகும்.
 

– நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிஃபாஸுள்ள பெண்கள் நாற்பது நாட்கள் (சுத்தத்தை) எதிர்பார்த்து இருப்பார்கள் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி) இந்த ஹதீஸை கூறிய பின் திர்மிதி இமாம் அவர்கள் கூறுகிறார்கள்:

நிஃபாஸுள்ள பெண் நாற்பது நாட்களுக்கு முன் சுத்தமாகிவிட்டால் குளித்து சுத்தமாகி தொழ வேண்டும். அதிகபட்சமாக நாற்பது நாட்கள் வரைக்கும் சுத்தத்தை எதிர்பார்த்து (தொழாமல்) இருக்கலாம். நாற்பது நாட்களைவிடவும் அதிகமாக இரத்தம் வந்து கொண்டிருந்தால் அது நோயினால் ஏற்பட்டதாகும். இந்த நேரத்தில் தொழுகையை நிறுத்தக்கூடாது என நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் தாபியீன்கள் ஏகோபித்து கூறினார்கள்.

நிஃபாஸுள்ள பெண் செய்யக்கூடாதவைகள்:-
 

மாதவிடாய் பெண்ணுக்கு தடுக்கப்பட்டவைகளெல்லாம் நிஃபாஸுள்ள பெண்ணுக்கும் தடுக்கப்பட்டிருக்கின்றது.

தொடர் உதிரப்போக்கு

தொடர் உதிரப்போக்கு என்பது: நிற்காமல் பெண்களுக்கு தொடர்ந்து வரக்கூடிய இரத்தத்திற்கு சொல்லப்படும். இப்படி இரத்தம் வரக்கூடிய பெண்கள் மாதவிடாய் மற்றும் நிஃபாஸுடைய இரத்தம் வரக்கூடிய பெண்களைப்போன்று சுத்தமில்லாத பெண்களாக கணக்கிடப்படமாட்டார்கள். இதை ஒரு நோயாகவே கணக்கிடப்படும். தொடர் உதிரப்போக்குள்ள பெண்கள் தங்களுக்குரிய மாதவிடாய் காலத்தை எப்படி அறிந்து கொள்வது. அவைகள் பின்வருமாறு:-

1. தொடர் உதிரப்போக்கு ஏற்படுவதற்கு முன் ஒரு பெண் அவளுக்குரிய மாதவிடாய் காலத்தை தெரிந்திருப்பது. அதாவது ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் மாதவிடாயாக இருந்து பின்பு சுத்தமாகக்கூடிய ஒரு பெண் தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணாக மாறி விட்டால் மாதவிடாய் காலத்தை எப்படி தெரிந்து கொள்வது.?

விடை: தொடர் உதிரப்போக்கு ஆகுவதற்கு முன் எத்தனை நாட்கள் மாதவிடாயாக இருந்தாளோ அந்த நாட்களை மாதவிடாய் காலமாக கருதிக்கொண்டு மாதவிடாய் காலம் முடிந்ததும் குளித்துக்கொண்டு மற்ற நாட்களை சுத்தமான நாட்களாக கருதி அந்த நாட்களில் இரத்தம் வரக்கூடிய இடத்தை இரத்தம் வராத அளவுக்கு சுத்தம் செய்துவிட்டு தொழ வேண்டும். சுத்தமாக இருக்கும் பெண்ணுக்கு ஆகுமானதெல்லாம் இந்த பெண்ணுக்கும் ஆகுமாகும்.

தொடர் உதிரப்போக்குள்ள ஒரு பெண்ணைப்பற்றி உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் கேட்டார்கள். ‘ஒவ்வொரு மாதமும் மாதவிடாயாக இருந்த காலத்தில் தொழாமல் காத்திருக்கட்டும். பின்பு குளித்து இரத்தம் வரக்கூடிய இடத்தை கட்டிக்கொண்டு அவள் தொழட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)

2. தொடர் உதிரப்போக்கு வருவதற்கு முன் தனக்கு மாதவிடாய் வந்த காலத்தை ஒரு பெண் மறந்து விட்டால் அல்லது பெரிய வயதை அடையும் போதே தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணாகிவிட்டால் மாதவிடாய் காலத்தை எப்படி தெரிந்து கொள்வது.?

விடை: இப்படிப்பட்ட பெண் மாதவிடாய்க்காலத்தை ஆறு நாள் அல்லது ஏழு நாளாக கணக்கிட வேண்டும். இப்படித்தான் அதிகமான பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும். நான் மிகக் கடினமான உதிரப்போக்குள்ள பெண்ணாக இருந்தேன். என் சகோதரி ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது இதற்குரிய சட்டத்தை நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு மிகவும் கடினமாக உதிரப்போக்காக இருக்கின்றது அதனால் தொழவும் முடியவில்லை, நோன்பு நோற்கவும் முடியவில்லை அதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? அந்த இடத்தில் பஞ்சால் துடைத்துக்கொள்ளுங்கள். அது இரத்தத்தை போக்கி விடும் என்றார்கள். அதைத்தாண்டியும் இரத்தம் வருகின்றது என அப்பெண் கூறினார்கள். புடவையால் அந்த இடத்தை கட்டிக்கொள்ளுங்கள் எனக்கூறினார்கள். (அதைத்தாண்டியும்) இரத்தம் ஓடிக்கொண்டிருக்கின்றது என அவர்கள் கூறினார்கள், அப்படியானல் நான் இரு விடயத்தைக் (செய்தியைக்) கொண்டு ஏவுகின்றேன் அவ்விரண்டில் முடியுமானதை செய்யுங்கள், அவ்விரண்டில் எது உமக்கு முடியும் என்பதை நீர்தான் மிகவும் அறிந்தவர். அல்லாஹ்வின் அறிவில் நீங்கள் ஆறு நாட்கள் அல்லது ஏழு நாட்கள் மாதவிடாயாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு குளித்துக் கொண்டு சுத்தமாகி இருபத்தி மூன்று நாட்கள் அல்லது இருபத்தி நான்கு நாட்கள் தொழுது நோன்பு நோற்றுக் கொள் அது போதுமாகும். ஒவ்வொரு பெண்களும் அவர்கள் மாதவிடாயாக இருந்து சுத்தமாகுவது போன்று இவ்வாறே நீரும் ஒவ்வொரு மாதமும் செய்து கொள் இது போதுமாகும். அல்லது லுஹர் நேரத்தின் கடைசி வரை காத்திருந்து குளித்துக்கொண்டு லுஹர் தொழுகையை அதன் கடைசி நேரத்திலும், அஸர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலும் சேர்த்து தொழுவது, மஃரிப் நேரத்தின் கடைசி வரை காத்திருந்து குளித்துக்கொண்டு மஃரிப் தொழுகையை அதன் கடைசி நேரத்தில் தொழுது விட்டு இஷாத்தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் சேர்த்து தொழுவது, சுப்ஹுடைய நேரத்தில் குளித்துக் கொண்டு சுப்ஹுத் தொழுகையை தொழுவது இது முடியுமாக இருந்தால் இப்படி செய்து கொண்டு தொழுங்கள் இன்னும் நோன்பும் நோற்றுக் கொள்ளுங்கள், இவ்விரண்டு முறையிலும் என்னிடத்தில் இதுதான் மிகவும் சிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹம்னா பின்த் ஜஹ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)

3. தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணுக்கு இதற்கு முன் மாதவிடாய் ஏற்படும் காலம் குறிப்பிட்ட காலமாக இல்லையென்றிருந்தால் (அதாவது சில மாதம் ஆரம்பத்திலும், சில மாதம் நடுவிலும், சில மாதம் கடைசியிலும் மாத விடாய் ஏற்படக்கூடியவளாக இருந்தால்) ஆனால் மாதவிடாயின் இரத்தத்தை மற்ற இரத்ததிலிருந்து பிரித்து அறியக்கூடியவளாக இருந்தால் மாதவிடாயின் நிற இரத்தத்தின் காலத்தை மாதவிடாய் காலமாக நினைத்துக்கொண்டு மற்ற நாட்களை சுத்தமான நாட்களாக கருத வேண்டும்.

ஃபாத்திமா பின்த் அபூஹுபைஸ் என்னும் நபித்தோழி தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணாக இருந்தார்கள். கருப்பு நிறமுள்ளதாக இரத்தம் இருந்தால் அது மாதவிடாய் இரத்தமாகும், அப்போது தொழுகையை நிறுத்திக் கொள்ளுங்கள். அது அல்லாத நிறமுள்ளதாக இருந்தால் ஒழு செய்து கொண்டு தொழுது கொள்ளுங்கள் அது நோயின் காரணத்தால் ஏற்பட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)

தொடர் உதிரப்போக்குள்ள பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:-
 

– தொடர் உதிரப்போக்குள்ள பெண் மாதவிடாய் காலம் முடிந்தவுடன் ஒரு தரம் குளித்துக் கொண்டால் போதும். அதன் பிறகு ஒழு மாத்திரம் செய்ய வேண்டும் குளிப்பது அவசியமில்லை.

– ஒவ்வொரு தொழுகைக்கும் ஒழு செய்து கொள்ள வேண்டும்.

– தொழுவதற்கு முன் இரத்தம் வரக்கூடிய இடத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை விடவும் அதிகமாக இரத்தம் வந்தால் ஒரு துணியால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது நல்லது.

– இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளுதல் ஆகுமாகும். சுத்தமான பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்தும் இப்பெண்ணுக்கும் அனுமதிக்கப்படும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

This entry was posted in இஸ்லாமியப் பெண். Bookmark the permalink.