ஸூஃபியிஸம்: தங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள், ஆபத்துக்கள் நேருமாயின் தாங்கள் ‘யாஷெய்கு’ அல்லது ‘யா பீர்’ என்று அவர்கள் அழைத்தால் அந்த ஷெய்குமார்களோ அல்லது ஸூஃபிகளோ வந்து உதவுவார்கள் என்று இக்கொள்கைகளை நம்புபவர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாம்: “ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்” (அல்குர்ஆன்: 26:213)
ஸூஃபியிஸம்: ஸூஃபியாக்கள் தம்மைத்தாமே வருத்திக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையை விட்டும் ஒதுங்கி இஸ்லாம் விரும்பாத துறவறத்தை மேற்கொள்கின்றனர்.
இஸ்லாம்: “….அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை….” (அல்குர்ஆன்: 57:27)
இஸ்லாம் குடும்பத்தார்களுடன் மற்ற உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதை வலியுறுத்துகிறது. மேலும் இஸ்லாத்தை அழிப்பதற்காக வருபவர்களை எதிர்த்து நிற்க வலியுறுத்துகிறது. மேலும் குர்ஆன் இவ்வுலகின் நற்பாக்கியங்களை விட்டும் ஒதுங்கி விடவேண்டாம் எனக் கூறுகிறது.
“மேலும், அல்லாஹ் உனக்கு கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத் தேடிக்கொள். எனினும் இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதை) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்குர்ஆன்: 28:77)
‘நாங்கள் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது அவர்கள் ‘நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டு, கஷ்டமான அமல்களைச் செய்வதை விட்டும் நாம் தடுக்கப்பட்டுள்ளோம்’ என்று கூறினார்கள்’ அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (9/396)
ஸூஃபியிஸம்: அல்லாஹ் இவ்வுலகத்தையும் மற்றும் இதிலுள்ளவைகளையும் நபி (ஸல்) அவர்களுக்காகத்தான் படைத்ததாக ஸூஃபியாக்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாம்: அல்லாஹ் கூறுகிறான்: “இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 51:56)
மேலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறுகிறான்: “(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!” (அல்குர்ஆன்:15:97-99)
ஸூஃபியிஸம்: ‘இறைவனை நினைக்கும்போது தங்களின் ஷெய்குகளின் உருவங்களை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்’ என்று இஹ்ஸான் என்பதற்கு விளக்கமளித்த ஸூஃபிகள் கூறுகிறார்கள்.
இஸ்லாம்: நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘இஹ்ஸான்’ என்பது அல்லாஹ்வை வணங்கும்போது அவனைப் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நாம் அவனைப் பார்க்க முடியாது. எனினும், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ அறிவிப்பாளர்கள்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.
ஸூஃபியிஸம்: ஸூஃபிகள் தங்களால் இறைவனைக் காண முடியும் என வாதிடுகின்றனர்.
இஸ்லாம்: “நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவரிடம் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியை தோற்றுவித்தபோது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்; ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்” (அல்குர்ஆன்: 7:143)
கலீமுல்லாஹ் என போற்றப்படும் அல்லாஹ்வுடன் உரையாடிய ஒரு சிறந்த நபிக்கே இறைவனைக் காண முடியாது என்றிருக்கும்போது ஸூஃபிகளால் எவ்வாறு இறைவனைக் காண முடியும்? அப்படியென்றால் ஸூஃபிகள் மூஸா (அலை) அவர்களை விட உயர்ந்து விட்டனரோ? மேலும் இறைவன் கூறுகிறான்:
“பார்வைகள் அவனை அடைய முடியாது; ஆனால் அவனோ (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்குர்ஆன்: 6:103)
நபி (ஸல்) அவர்களே இறைவனை காணவில்லை. பார்க்க ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ். (முந்திய பதிவு).